Asianet News TamilAsianet News Tamil

கான்கிரீட் போடுவதற்கு முன், போடும்போது, போட்டபின் கவனத்தில் கொள்ளவேண்டியவை…

Before putting concrete
Before putting concrete
Author
First Published Jul 31, 2017, 12:34 PM IST


கட்டுமானத் தொழிலில் கான்கிரீட் போடுவதற்கு முன், போடும்போது, போட்டபின் கவனத்தில் கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்.

கான்கிரீட் இடுவதற்கு முன்பிருந்தே பல பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்து விட வேண்டும். எந்தெந்தக் கட்டடங்களில் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படக் கூடும் என்பதை ஆராய வேண்டும். அவற்றைத் தடுப்பது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாளைக்குக் கான்கிரீட் போட இருப்பீர்கள். பலகை அடைப்பு வேலைகள் எல்லாம் முடிந்திருக்கும். ஆங்காங்கே மரக் கால்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் ஒரு சித்தாள் வருவார். ஏணியைப் பலகையின் மேல் சார்த்துவார். கிடுகிடுவென்று மேலே ஏறுவார். ஏணி தடதடவென்று சரிய நேரலாம். 
எனவே, கான்கிரீட் இடும்போது மேற்கொள்ள வேண்டியவை:

1.. தேவையில்லாமல் கண்டபடி, பலகைகளின் மேல் ஏறுவதையும் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.

2.. உயரத்தில் இருந்து வேலையாட்கள் கீழே இருப்பவர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்க வேண்டும். விளிம்புகள், ஓரங்கள், முனைகள் பாதுகாப்பாகத் தடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லாத உயரமான தளங்களில் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதோ அரட்டை அடிப்பதோ கூடவே கூடாது.

3.. பலகை அடைப்பு அதன் முழுப் பரப்பிலும் முறையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதிக்கவேண்டும். எங்காவது ஓரிடத்தில் பலகை பிளந்து கொண்டு நிற்கலாம். பலவீனமாக ஆகி இருக்கலாம். சந்துகள் சரிவர அடைக்கப்படாமல் இருக்கலாம். அத்தகைய தளத்தின் மேல் கவனக்குறைவாகவோ அவசரமாகவோ நடக்க நேர்பவர்கள் தளத்தைப் 
பொத்துக் கொண்டு கீழே விழ நேரும்.

4.. பல பேர் தாங்கள் நடக்கும் போது காலை எங்கே வைக்கிறோம் என்பது பற்றிக் கவலையே படமாட்டார்கள். இதனால் தடுக்கிவிழுவதும், சறுக்கி விழுவதும் சகஜமாகிவிடும். வெறும் பரப்பில் விழுந்தாலும் பரவாயில்லை. முனைகள் தாறுமாறாக நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிக் கட்டுமானத்தின் மேல் விழுந்து வைத்தால்? அவ்வளவுதான். கவனக்குறைவாக நடந்து சென்று கம்பிகளின் மேல் இடித்துக்கொள்வதால் ஏற்படும் காயங்களும் விபத்துக்களும் தவிர்க்கப்பட வேண்டியவை.

5.. பலகை அடைக்கப்படுவது அதன் மேல் கொட்டப்படும் கான்கிரீட் கலவையின் பளுவைத் தாங்குவதற்காகத்தான். கொட்டும் வேலை நடக்கும் போது அந்தத் தளத்தின் மேல் நிற்கக் கூடிய ஆட்களின் பளுவையும் தாங்கியாக வேண்டும். அதற்குமேல் சில கருவிகள், சாதனங்கள். போதும். எதற்கும் ஒரு எல்லை உண்டு இல்லையா? இது வெறும் மரப்பலகை இல்லை..இரும்புத் தகடுகளால் ஆன அடைப்பு என்கிற நினைப்பே பலருக்கும் அசட்டுத் துணிச்சலை ஏற்படுத்திவிடும்.

6.. சில கட்டுமானப் பகுதிகளின் வடிவம் சீரற்றதாக இருக்கும்.வளைந்து நெளிந்து செல்வதாக இருக்கும். குறுகலான வழி மட்டுமே கிடைக்கும். மேலே தலையில் இடிக்கும். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் தடுக்கி விழ வாய்ப்பு ஏற்படும். அத்தகைய இடங்களில் அவசரம் அவசரமாக வேலைகளை முடிக்க முனையக் கூடாது. அவசரம் ஆபத்தில் முடியும்.

7.. பலகை அடைப்பு வேலைகளில் நல்ல கவனத்துடன் செயல்படுகிறவர்களும் இருப்பார்கள். அவர்களும் சில இடங்களில் கோட்டை விட்டுவிடுவார்கள். பழுதாகி உள்ள, பலவீனமான பகுதிகளைச் சரி செய்ய முனைவார்கள். ஆனால், அதற்குப் பயன்படுத்தும் பாகங்கள் விசயத்தில் தவறு செய்து விடுவார்கள். பொருத்தப்பட்ட பாகங்கள் பலமிழந்து போக நேரலாம். இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுவிடலாம். செய்வன திருந்தச் செய் என்பது இங்கு மிக மிக முக்கியம்.

8.. கூரான கம்பியா? தவிர்க்கவேண்டும். இற்றுப் போன கம்பியா? இடம் கொடுக்கக் கூடாது. கூரான முனைகளைக் கொண்ட கம்பிகள் எங்காவது நீட்டிக் கொண்டு இருக்கின்றனவா? இவை குத்திக் கிழித்துவிடக் கூடும். இரத்தக் காயங்களை ஏற்படுத்தக் கூடும்.  அதே போல், துருப்பிடித்து இற்றுப் போய் நிற்கும் கம்பிகள் ஒடிந்து விழுந்துவிட நேரும். இவற்றை எல்லாம் முன்னதாகவே சோதித்து அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

9.. என்னதான் அவசரம் என்றாலும் அப்போதும் பொறுமை வேண்டும். இயந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தினாலும்  கூடப் பெரும்பாலான வேலைகளுக்கு மனித உடல் உழைப்பையே நம்பி இருக்க வேண்டி உள்ளது.

மனிதர்கள் இயந்திரங்களல்ல. அவர்களுக்குக் களைப்பு, சோர்வு, பசி, தாகம் ஏற்படுவது இயற்கை. சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை, கிடுகிடுக்க வைக்கும் குளிர், ஆளைச் சாய்க்கும் காற்று, மூச்சை அடைக்கும் தூசி, காதைப் பிளக்கும் ஓசை போன்ற சூழ்நிலைகளிலும் கூடக் கட்டாயமாக வேலை செய்தே ஆக வேண்டும் என்று தொழிலாளர்களைப் போட்டு வாட்டி வதைக்கும் விதத்தில் வேலை வாங்கினால் பல விபத்துக்கள் கண்முன் நிகழ்ந்து முடிந்துவிடும். இரக்கம், மனிதாபிமானம் கொஞ்சம் இருக்கத்தான் வேண்டும்.

10.. பலகை அடைப்பு வேலைகளின் போது ரச மட்டம் வைத்து மட்டம்
சீராக இருக்கிறதா என்று சோதிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலும் மாட்டார்கள். தேவையற்ற சரிவுகள் சறுக்கலில் முடியும். பலகைகள் நொறுங்கி விழும். கவனம். கவனம்.

11.. ரொம்பவும் திறமையாகச் செயல்படுகிறோமாக் கும் என்று நினைத்துக் கொண்டு 
மறுநாள் வேலைக்குத் தேவையான செங்கல், மணல், சிமெண்டை எல்லாம் கொண்டு போய்ப் புதிதாகக் கான்கிரீட் இடப்பட்ட தளத்தில் அடுக்கி வைக்கிறீர்களா? அதிகப்படி ஆபத்து.  மெதுவாய்ப் பார்த்துக் கொள்ளலாமே? உங்கள் அவசரம் கான்கிரீட்டிற்குப் புரியுமா? 
அதிக கனத்தை ஏற்றினாய், நான் உட்கார்ந்துவிட்டேன் என்று சொல்லி விடும். பார்த்துக் கொள்ளுங்கள்.

12.. வேலைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானவைதானா? வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துகிறீர்களா? வாடகைக்குக் கொடுப்பவர்கள் அந்தப் பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்களா? தரம் குறைந்த பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடுகிறார்களா? கவனமாக இருங்கள். பத்துக் கால்கள் வேண்டி இருக்கும் இடத்தில் எட்டு போதும் என்று சிக்கனம் பண்ண நினைக்க வேண்டாம்.கட்டிடத்திற்கும் பாதுகாப்பு வேண்டும். அதே சமயம் ஆட்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios