Asianet News TamilAsianet News Tamil

வீட்டில், இரு அறைகளை இணைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை…

at home-please-note-when-connecting-two-rooms
Author
First Published Feb 24, 2017, 1:17 PM IST


வீடு என்பது சகல வசதிகளுடன் திகழ வேண்டும் எனில், அது தன்னகத்தே வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, சாப்பாட்டு அறை, பூஜை அறை, சேமிப்பறை எனப் பலவற்றையும் கொண்டதாக அமைய வேண்டும்.

ஆனால் இன்றைய நவ நாகரிக யுகத்தில் இடப்பற்றாக்குறையின் காரணமாக அனைத்துமே சுருங்கிக் குறைவான இடத்தில் வளமான வாழ்வு வாழ்வது என்பதை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம்.

பூஜை அறையைச் சுவரில் மாட்டும் அலமாரியாகவும், கழிப்பறை, குளியலறை இரண்டையும் இணைத்து ஒரே இடத்தில் அமைத்தும் இடத்தைச் சேமிக்கிறோம்.

தற்கால வடிவமைப்பு முறைகளின்படி சாப்பாட்டு அறை வரவேற்பறையை ஒட்டியதாக அல்லது அதன் அருகில் அமைக்கப்படும் போக்கு காணப்படுகிறது.

சில சமயங்களில் பயன்பாட்டு வசதிக்காகச் சாப்பாட்டு அறையையும் சமையலறையையும் இணைத்து அமைக்கிறார்கள்.

இவ்வாறு இரு அறைகளை இணைக்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் வரவேற்பறையின் எழில் குன்றாமல் பார்த்துக் கொள்ளலாம்.

அ.. இரு அறைகளிலும் அறைக்கலன்கள் எங்கெங்கே வரும் என்பதை முதலிலேயே முடிவுசெய்து கொள்ள வேண்டும். நெருக்கமாக அமைத்தால் சிறப்பாக இருக்காது. அப்படி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோமானால் இரு அறைகளுக்கும் நடுவே அழகிய திரைச்சீலை அல்லது தடுப்பான் கொண்டு மறைத்து விடலாம்.

ஆ.. அறைக்கலன்களை அடுக்கும்போது சுவரை ஒட்டினாற்போல அமைக்காமல் சிறிது தள்ளி அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை சிறியதாயினும் பெரிதாய் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்.

இ.. அறையில் இருக்கும் ஒளியின் அளவானது அறையின் அளவை நிர்ணயிக்கும். நன்றாக ஒளியூட்டப்பட்ட அறையைப் பெரிதாகக் காட்ட முடியும். நீண்ட நிற்கும் விளக்குகள் அல்லது தொங்கும் சர விளக்குகள் அறையின் நீள அகலத்தைச் சற்றே பெரிதாகக் காட்டும்.

ஈ.. அறைகளில் அதிக கண்ணாடிகள் வருவதுபோல் வடிவமைத்தால் அதுவும் அவற்றை விசாலமாகக் காட்டும்.

உ. இரு அறைகளையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேறு வேறு வகையான திரைச்சீலைகள் அமைக்க வேண்டும்.

ஊ.. இரு அறைகள் இணைந்திருந்தால் அதற்குரிய தரை அமைக்கும்போது இரு அறைகளையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் வண்ணம் அமைக்க வேண்டும். அவை ஒன்றோடு ஒன்று இணையும் இடம் தனியே விலகி நின்று தெரியாமல் இயைந்தாற் போல அமைக்க வேண்டும்.

எடுத்துக் காட்டாக பளிங்கால் அமைத்தால் இரு அறைகளையுமே பளிங்கால் அமைக்க வேண்டும். டைல்களால் அமைத்தால் இரு அறைகைளயுமே டைல்களால் அமைக்க வேண்டும்.

எ.. சாப்பாட்டு அறை சிறியதாக இருக்கும் பட்சத்தில் அதனைப் பெரிதாகக் காட்ட வேண்டுமெனில் வட்டம் அல்லது நீள்வட்ட மேஜை அமைக்கலாம். இவை அதிக நாற்காலிகளைத் தன்னகத்தே கொள்ள உதவும். மேஜை மீது விரிப்பான் அமைத்துவிட்டால் மேஜையின் மேலுள்ள கறை மற்றும் கீறல்கள் மறைத்துவிடும். கண்ணாடியினாலான மேஜை எனில் ஒளியைப் பிரதிபலித்து அறையைப் பெரிதாகக் காட்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios