தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் சில ஆண்டுகளாக ஒதுங்கியே இருக்கும் நிலையில் திருப்பூரில் நடக்கவுள்ள மாநாட்டில் கேப்டனின் மகன் பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு கட்சியில் வழங்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள் சீனியர்கள்.

உடல் நல குறைபாடு என்று பல பிரச்னைகளால் தீவிர அரசியலுக்கு லீவு விட்டிருந்தார் விஜயகாந்த்.  அதிலும் கடந்த சில மாதங்களாக பர்ஷனல் மற்றும் பாலிடிக்ஸ் சைடில் அநியாயத்துக்கு சைலண்டாகி கிடந்த நிலையில், இதோ மாநாடு வடிவில் தன் கட்சியினருக்கு பூஸ்ட் கொடுக்க தாறுமாறாக தயாராகிவிட்டார் கேப்டன்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கூட விஜயகாந்த் பிரச்சரத்துக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டு கடைசியாக ஒரு நாள் மட்டும் மாலைநேரத்தில் சில மணி நேரம் பிரச்சார வேனில் ஊர்வலமாக சென்று ஓரிரு வார்த்தைகளையே பேசி முடித்தார் விஜயகாந்த். பெருசா கேப்டன் பேசுவாரென்று எதிர்பார்த்த தேமுதிக தொண்டர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இந்நிலையில்தான் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தேமுதிகவின் முப்பெரும் விழா மாநாடு திருப்பூரில் நடக்க இருப்பதாகவும் அதற்கு விஜயகாந்த் தலைமை தாங்க இருப்பதாகவும் தேமுதிக தலைமைக் கழகம் இன்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துவெங்கடேசன் நடத்தும் இந்த பிரமாண்ட மாநாடு விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று நடக்கும் இந்த முப்பெரும் விழாவாக இருக்கும் என்றும் இந்த விழாவில் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசுவாரா? என்று தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் கூட விஜயகாந்தை முக்கிய நிர்வாகிகள் அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் பேச்சுப் பயிற்சி எடுத்து வருகிறார். பேசுவார் என்றெல்லாம் பில்ட் - அப் செய்தார்கள். ஆனால் கேப்டனை பார்க்கவே முடியவில்லை. இந்நிலையில் பல மாவட்டங்களிலும் நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்து வருகின்றனர்.  

கடந்த ஆண்டு பிளான் போட்ட இந்த மாநாடு விஜயகாந்த்தின் உடல் நிலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது, தலைமைக் கழக நிர்வாகிகள் மூலமாக இந்த  தகவலை திருப்போர் மாவட்ட செயலாளர் முத்துவெங்கடேஸ்வரனுக்கு சொல்லப்பட்டதாம், அப்போது, நம்ம கேப்டன் ரொம்ப நாளைக்கு அப்புறமா வெளியில தலை காட்டுறாரு, அதனால் நீங்க இந்த மாநாட்டை சிறப்பாக செய்தாகணும், நீங்க நடத்திறத ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் என ஒட்டுமொத்தமா அலறணும்ன்னு நம்ம கேப்டனும் அண்ணியாரும் சொன்னாங்க. அதனால நீங்க தான் பண்ணனும் என சொன்னார்களாம். இதனையடுத்து,  கூடிய விரைவில் மாநாட்டை பிரமாண்டமாய் நடத்திட திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரவுண்டு தேட துவங்கிவிட்டார் முத்துவெங்கடேஸ்வரன்.

தேர்தலுக்கு பின் மொத்தமாக ஆட்டம் கண்டுள்ள தேமுதிக பிரமாண்ட முப்பெரும் விழா மாநாடு கூட்டியிருக்கிறார்கள். இந்த திருப்பூர் மாநாட்டில் கேப்டனின் மகன் பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு கட்சியில் வழங்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள் சீனியர்கள்.