திமுக இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் நாளே தனது பணிகளை உதயநிதி ஸ்டாலின் துவங்கியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தது போலவே உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்று முடிந்துவிட்டது. நல்ல வளர்பிறையில் முகூர்த்த நாளில் உதயநிதியின் ஜாதகத்தின் படி நல்ல நேரத்தில் அவருக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை வெளியான போது உதயநிதி தனது தாய் துர்கா, மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இருந்துள்ளார். 

உதயநிதியின் வலதுகரமாக இருக்கும் அன்பில் மகேஷ் கூட சட்டப்பேரவையில் தான் இருந்தார். முதலில் கலைஞர் டிவியில் புதிய பொறுப்பு குறித்த அறிவிப்பு வெளியான உடன் தாய் துர்கா உதயநிதிக்கு ஸ்வீட் ஊட்டியுள்ளார். தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு கோவில்களில் பூஜை செய்து கொண்டுவரப்பட்ட பிரசாதங்களை துர்கா உதயநிதிக்கு கொடுத்துள்ளார். 

இதன் பிறகு மாலை 4 மணி அளவில் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்திற்கு வந்தார். அங்கு காத்திருந்த உதயநிதி ஸ்டாலின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இதன் பிறகே திமுகவின் மற்ற நிர்வாகிகள் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். மூத்த நிர்வாகிகள் பின்னர் மாவட்ட நிர்வாகிகள் வரிசையாக வந்து உதயநிதியிடம் வாழ்த்து தெரிவித்துவிட்டு நடையை கட்டினர். 

இதன் பிறகு திராவிட இயக்க தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய உதயநிதி நேராக இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு ஏற்கனவே திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உதயநிதியின் ரசிகர் மன்றத்தினர் குவிந்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் உதயநிதியால் போராடித்தான் உள்ளே செல்ல முடிந்தது. அன்பகத்திலும் உதயநிதி வாழ்த்து மழையில் நனைந்தார்.

பின்னர் வெளியூரில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் தொலைபேசி மூலமாக உதயநிதியிடம் பேசினர். தொடர்ந்து இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்து பேச ஆரம்பித்தார் உதயநிதி. மாவட்டந்தோறும் விரைவில் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அதன் பிறகு சென்னையில் மிக பிரமாண்டமான மாநாட்டை கூட்ட உள்ளதாகவும் கூறுகிறார்கள். இது குறித்து நேற்றே சில முக்கிய நிர்வாகிகளிடம் உதயநிதி பேசிவிட்டதாகவும் சொல்கிறார்கள். 

சென்னையில் திமுக மாநாடு நடத்தி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனவே அந்த குறையை போக்கும் வகையில் இளைஞர் அணி மாநாட்டை சென்னை அருகே ஒரு இடத்தில் நடத்துவது என்று உதயநிதி முடிவெடுத்துள்ளதாகவும் விரைவில் தனது தந்தையிடம் பேசிவிட்டு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இதனிடையே ஸ்டாலினின் சமூக வலைதள பிரச்சாரத்தை கவனித்து வரும் சுனிலின் ஓஎம்ஜி நிறுவனமே உதயநிதிக்கான பிரச்சார பணிகளையும் கவனிக்க ஆரம்பித்துள்ளது.