வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். மாவட்ட பிரிப்பிற்காக பலமுறை போராடிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸிற்கு திருப்பத்தூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ் வேலூர் மாவட்டத்தை பிரிக்க பலமுறை போராடி இருப்பதாகவும் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முதல்வரை பாராட்டிய ராமதாஸ் 10  ஆண்டுகளாக எந்த மாவட்டமும் பிரிக்கப்படவில்லை என்றும் தற்போது நடக்கும் ஆட்சியில்தான் 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தென்காசியை தவிர்த்து புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மற்ற மாவட்டங்கள் உருவாக தான் போராடி வெற்றி பெற்றுள்ளதாக கூறிய ராமதாஸ் திருப்பத்தூர் மாவட்டம் பிரிப்பதற்கு முதல் காரணமாக இருந்தவர் முன்னாள் எம்எல்ஏ டி.கே ராஜா என்றார். மாவட்டங்கள் பிரிக்கப்படும்போது வணிகம் சிறப்படையும் .புதிதாக ஒரு மாவட்டம் உருவாகும் போது 62 அரசு துறைகள் உருவாகும். அதனால் அதிகாரிகள் அந்த மாவட்டத்திற்கு வருவார்கள். அவர்களை சுலபமாக மக்கள் சந்திக்க முடியும் என்றார்.

101 நாடுகளை விட பெரிய மாவட்டமாக வேலூர் மாவட்டம் இருந்த நிலையில் அதனை முன்பே பிரித்திருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் 10 லட்சம், 15 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை இருக்கும் மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உடனடியாக பிரிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை படிப்படியாக பிரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்தில் வாழும் மக்கள் இனி வரும் காலத்தில் பாமகவை ஆதரிக்க வேண்டும் என்று கூறிய ராமதாஸ் வாக்களிக்க போகும் போது , தங்களுக்காக யார் போராடினார்கள் என்பதை சிந்தித்து மக்கள் ஓட்டு போட வேண்டும் என்றார்.

சோறு போடும் விவசாயி தான் தனக்கு கடவுள் என்று அன்புமணி ராமதாஸ் கூறுவதால் அவர் பின்னால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வருவதாகவும் அவர் நல்ல வழிகாட்டுவார் நினைப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களின் விடுதலைக்கு தான் தொடர்ந்து போராடி வருவதாக குறிப்பிட்ட ராமதாஸ், அவர்கள் விரைவில் வெளிவருவார்கள் என்று உறுதி அளிப்பதாக தெரிவித்தார்.