Asianet News TamilAsianet News Tamil

பானையை ஓட்டை ஆக்கியதில் உங்களுக்கும் பங்குண்டு - ஸ்டாலினை மரண கலாய் கலாய்க்கும் தமிழிசை...

You have also responsible for making a hole in pot - tamilisai teased stalin
You have also responsible for making a hole in pot - tamilisai teased stalin
Author
First Published Mar 16, 2018, 6:35 AM IST


சேலம்

தமிழக பட்ஜெட் குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஓட்டைப்பானையில் சமையல் செய்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "பானையை ஓட்டை ஆக்கியதில் தி.மு.க.விற்கும் பங்குண்டு" என்று கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பாரதீய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தொடங்கி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அமைப்பா? அணியா? பிரிவா? என்று அவர்களுக்கே ஒரு குழப்பம் இருக்கிறது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்தவித தாக்கத்தையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே அவர்கள் இருந்த கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்திக் கொள்வார்கள்.

டி.டி.வி.தினகரன் தொடங்கிய புதிய அமைப்பு தமிழக மக்களின் நலனுக்காக இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றபோது இந்த அரசை கவிழ்ப்பேன் என்று சொன்னாரே தவிர ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லவில்லை. 

இருக்கும் பணத்தை வைத்து ஒரு கலாட்டாவை காண்பிப்பாரே தவிர வேறு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் உண்மை.

தமிழக பட்ஜெட்டினை வரவேற்போம். ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு ஒரு பழக்கம் உள்ளது. சட்டமன்றத்துக்கு போனால் ஒன்று கிழிந்த சட்டையா இருக்கணும்.. இல்லையென்றால் கருப்பு சட்டையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் எதிர்க்கட்சியாக அவர் செயல்படவில்லை.

தமிழக பட்ஜெட்டில் எல்லாத்துறைகளிலும் கவனம் செலுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவேண்டும். 

பட்ஜெட் குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஓட்டைப்பானையில் சமையல் செய்துள்ளதாக கூறியுள்ளார். பானையை ஓட்டை ஆக்கியதில் தி.மு.க.விற்கும் பங்குண்டு. 

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சில ஆயிரம் கோடி கடன் இருந்தது. தற்போது 3½ இலட்சம் கோடி கடனை தாண்டி உள்ளது என்றால் அதில் தி.மு.க., அ.தி.மு.க. இருவருக்குமே முக்கிய பங்கு உள்ளது. அந்த ஓட்டை பானையை மாற்ற பா.ஜனதாவால் தான் முடியும்.

இன்றைய சூழ்நிலையில் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளன என்பதுதான் நிதி அமைச்சரின் கருத்து. இன்று பருப்பு வியாபாரிகள் பலனடைந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி. குறித்து அடிப்படை தெரியாமல் தவறாக முன்னிறுத்தப்படுகிறது. இதையெல்லாம் தமிழக மக்களுக்கு பா.ஜனதா எடுத்துச் சொல்லும். 

மலைவாழ் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி செம்மரக் கடத்தலுக்காக அழைத்துச் செல்லும் இடைத்தரகர்களை தமிழக அரசு கூடுதல் அக்கறை கொண்டு கவனிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாதான் காவிரி நீரை தரமாட்டேன் என்று கூறி வருகிறார். தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக பா.ஜனதா கண்டிப்பாக குரல் கொடுக்கும்.

மூன்று நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தவுடன் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ளது என்று கூறுபவர்களுக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். பா.ஜனதா கட்சி ஜெயிக்கும்போது வாக்கு எந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுகிறது என்று எங்களது உழைப்பை கொச்சைப்படுத்தியது இந்த நேரத்தில் நினைத்து பாருங்கள்.

ஊழலுக்காகத்தான் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தார்கள். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை பா.ஜனதா கட்சியால் மட்டுமே வழங்க முடியும்" என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios