UP new scheme

விவசாயிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்தும்….
ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் ரூ.10 ஆயிரம் வரையிலான மின்கட்டணத்தை அரசே 4 தவனைகளாக செலுத்தும் என்று முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான 2-வது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பா.ஜனதா வெற்றி

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் எம்.பி.யும், மடாதிபதியுமான யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.

கடன் தள்ளுபடி

இவர் பதவி ஏற்றதில் இருந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் ரூ.36 ஆயிரம் கோடி பயிர்கடனை தள்ளுபடி செய்து முதல்வர் ஆதித்யநாத் அறிவித்தார்.

2-வது அமைச்சரவைக் கூட்டம்

இந்நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் நேற்று லக்னோவில் நடந்தது. இதில் முதல்வர் ஆதித்யநாத், அமைச்சர்கள் கலந்து கொண்டு பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மின்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தடையில்லா மின்சாரம்

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 24 மணிநேரம் தடையில்லா மின்சார சப்ளை அளிக்க வேண்டும். சிறிய நகரங்களுக்கு நாள்தோறும் 20 மணிநேரமும், கிராமங்களில் 18 மணிநேர மின்சாரமும் வழங்க வேண்டும் என முதல்வர் ஆணையிட்டார்.

கிராமப் பகுதிகளில் மோசமான நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மர்களை 48 மணி நேரத்துக்குள்ளாகவும், நகர்புறங்களில் இருக்கும் டிரான்ஸ்பார்மர்களை 24 மணி நேரத்துக்குள்ளாகவும் மாற்ற வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது.

அனைத்து கிராமங்களுக்கும்

வரும் 14-ந்தேதி மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன், முதல்வர் ‘அனைவருக்கும் மின்சாரம்’ திட்டத்தில் முதல்வர் ஆதித்யநாத் கையொப்பம் இடுகிறார். இதன் மூலம் மாநிலத்தின் மின்தேவையை 2018ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்து, 2019ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் அளிக்கப்படும்.

காலை முதல் இரவுவரை

மேலும், தேர்வு நேரத்தில் மாணவர்கள், மாணவிகள் படிக்கும் போது, பாதிக்கபடாமல் இருக்கம் வகையில், தடையில்லாத மின் சப்ளை அளிக்க வேண்டும். கிராமங்களில் மாலை 6மணி முதல் காலை 6 மணி வரை தடையில்லா மின்சார சப்ளை அளிக்க வேண்டும் என முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மின்கட்டண நிலுவை

விவசாயிகளின் மின்சாரக் கட்டணம் ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தால், அந்த கட்டணத்தை 4 பிரிவுகளாக அரசை செலுத்தும். உருளைக்கிழங்கு விவசாயிகளைக் காக்கும் வகையில் குவிண்டால் ரூ.487 என்ற விலையில் ஒரு லட்சம் மெட்ரிக்டன்கள் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.