Yogi Adityanath

யோகி ஆதித்யநாத்தை பற்றி தெரிய வேண்டிய விசயங்கள்?... வன்முறையை தூண்டும் வார்த்தைகள்; சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு சொந்தக்காரர்

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக சாமியார் யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் பிரிக்கப்படாமல் இருக்கும் இருந்த உத்தரகாண்ட் மாநிலம், பஞ்சூரில் 1972ம் ஆண்டு,ஜூன் 5-ந்தேதி யோகி ஆதித்யநாத் பிறந்தார். இவரின் இயற்பெயர் அஜய்சிங் நெகி. ராஜ்புத்திரர்கள் குடும்பத்தில் இருந்த வந்த ஆதித்யாநாத், கர்வால் நகரில் உள்ள எச்.என்.பி. கர்வால் பல்கலையில் பி.எஸ்.சி. படித்தார்.

தீவிர இந்துத்துவ பற்றாளரான ஆதித்யாநாத், கோரக்பூர் லோக்சபாதொகுதியிலிருந்து 1998 முதல் 2014ம் ஆண்டு வரை 5 முறை எம்.பியாகதேர்ந்தெடுக்கப்பட்டவர். 26 வயதிலேயே எம்.பியாகி குறைந்த வயதில் எம்.பியானவர் என்ற பெருமையை ஈட்டியவர். திருமணத்தை மறுத்து துறவு வாழ்க்கை வாழ்பவர்.

கோராக்நாத் கோயிலின் மகாஇந்து சபைத் தலைவர் மகந்த் அவைத்யாநாத்துக்குபின், தலைவராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். 

2002ம் ஆண்டு இந்து யுவ வாகினி எனும் அமைப்பைத் தொடங்கி யோகி ஆதித்யாநாத், இந்த அமைப்பில் சேரும் ஆதரவாளர்களை கலாச்சார காவலர்களாக மாற்றினார். பல்வேறு போராட்டங்கள், கலவரங்களில் இந்த அமைப்பு ஈடுபட்டது. பசுக்களை காப்போம், லவ் ஜிகாதி உள்ளிட்ட விசயங்களை கையில் எடுத்து பெரிய சர்ச்சையை உண்டாக்கினார். 

2005ம் ஆண்டில், கிறிஸ்தவர்களை இந்துக்களாக மதம் திரும்ப செய்வதாக இவர் அறிவித்து செயல்படுத்திய நடவடிக்கைகளால் நாடு முழுக்க கவனம் ஈர்த்தார். உத்தரப்பிரதேசம் இட்டா நகரில் 1800 கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு மாற்றி நாடுமுழுவதும் பேசப்பட்டார். 

2007ம் ஆண்டு கோரக்பூரில் நடந்த முகரம் பண்டிகையின் போது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பெரிய கலவரம் மூண்டது. இதில் முக்கிய பங்காற்றிய யோகிஆதித்யநாத் கைது செய்யப்பட்டார். நாட்டில் அவ்வப்போது பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து பரபரப்பை உண்டாக்குபவர் யோகி ஆதித்யாநாத்.

2015ம்ஆண்டு இவர் பேசிய, சூரிய நமஸ்காரம் வேண்டாம் என்போர் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்ற சர்ச்சை பேச்சு, பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சையதுவுடன், நடிகர் ஷாரூக்கானை ஒப்பிட்டு பேசியிருந்தார் ஆதித்யாநாத்.

பாரதியஜனதா கடசி சார்பில் போட்டியிட்டு எம்.பியாக யோகி ஆதித்யநாத்இருந்தாலும், அவ்வப்போது கட்சித் தலைமையுடன் உரசல்கள் ஏற்பட்டுள்ளன.

2006ம் ஆண்டு லக்னோவில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்த அதே வேளையில், ‘விராட் ஹிந்து மகாசம்மேளனம்’ என்ற பெயரில் கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் விழா நடத்தினார். 

கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் கிழப்பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு 2007ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இடம் கேட்டு பா.ஜனதா தலைமையிடம் பிரச்சினை செய்தார் யோகி ஆதித்யாநாத். அதுமட்டும் அல்லாமல், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி எதிராக வாக்களித்து சர்ச்சையை யோகி ஆதித்யநாத் உண்டாக்கினார்.