தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை தவறாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தலைவராக பொறுப்பேற்றது முதல் தினந்தோறும் இரண்டு முதல் மூன்று அறிக்கைகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். வரும் 10-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

 

இதனை தொடர்ந்து நேற்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வரும் 10-ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினால் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்த ஸ்டாலின், பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்று கூறி ஒரு தொகையை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது தான் சர்ச்சையாகியுள்ளது. 

நேற்று அதாவது 07-09-2018 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83.13 ஆக இருந்தது. டீசல் விலையும் ஒரு லிட்டர் ரூ.76.17 ஆக இருந்தது.
ஆனால் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையிலோ ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.82.62 என்றும், டீசல் விலையை ரூ.75.45 என்றும்
குறிப்பிட்டிருந்தார். அதாவது நேற்று முன்தினம் (06-09-2018) அன்று பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிட்டு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். ஏழாம் தேதி வெளியிடும் அறிக்கைக்கு ஏழாம் தேதி விலையை ஸ்டாலின் குறிப்பிட்டிருக்க வேண்டும். 

அதுவும் நேற்று முன்தினத்தை விட நேற்று பெட்ரோல், டீசல் விலை அதிகமாகியுள்ளது. அப்படி இருக்கையில் அந்த அதிக தொகையை குறிப்பிடாமல் குறைவான தொகையை தவறுதலாக குறிப்பிட்டு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும் போது கூட, உச்சநீதிமன்ற தீர்ப்பையே ஸ்டாலின் மாற்றி கூறினார். இப்போது அறிக்கையிலும் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். தி.மு.க தலைவரான பின்னர் தனது பேட்டியிலும், அறிக்கையிலும் ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டாமா? என்று அவரது கட்சியினரே புலம்ப ஆரம்பித்துள்ளனர்.