Writer Ravikumar letter to actor Kamal Haasan
உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் தேதி, நடிகர் கமல் கட்சி துவங்க உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கட்சி துவக்கிய ஆண்டு விழா கொண்டாடுவதற்கு பதிலாக தாய்மொழி நாளைக் கடைப்பிடிக்குமாறு உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் கூறுவீர்களா? என நடிகர் கமலுக்கு, எழுத்தாளர்
ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று அரசியல் கட்சி தொடங்குவதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளில் நடிகர் கமல் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமார், கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீங்கள் கட்சி துவங்க உள்ள பிப்ரவரி 21 ஆம் தேதி, உலக தாய்மொழி நாளாகும். நீடித்த வளர்ச்சிக்கு மொழி பன்மைத்துவம், பன்மொழி ஆளுமை என்பதை
இந்த ஆண்டின் தாய்மொழி நாளுக்கான மையக் கருத்தாக ஐநா சபை அறிவித்துள்ளது.
அடிப்படைக் கல்வியை குழந்தைகள் தாய்மொழியில் பயில்வதே அவசியம் என ஐ.நா. கூறியுள்ளது. உள்ளூர் மொழியின் வளர்ச்சியே நீடித்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் என தெரிவித்துள்ளது.
இனி ஒவ்வொரு ஆண்டும் கட்சி துவக்கிய ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு பதிலாக தாய்மொழி நாளை கடைப்பிடிக்குமாறு உங்கள் தொண்டர்களுக்கு நீங்கள் கூறுவீர்களா? அந்த நாளில் தமிழ்க் கல்வியின் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் எடுத்துக்கூட நீங்கள் முன்வருவீர்களா? என எழுத்தாளர் ரவிக்குமார் கடிதத்தில் கூறியுள்ளார்.
