பாமக வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் 3 கூடை மாம்பழம் எனக்கு கொண்டு வர வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தற்போது வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கரோனா பரவல் காரணமாக முன்பை போல தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் காரில் இருந்தபடியே பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்தத் தேர்தலில் பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். பாமக போட்டியிடும் தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க செய்ய வேண்டும். கீழ்ப்பெண்ணாத்தார் தொகுதியில் வேட்பாளர் செல்வகுமார் வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் 3 கூடை மாம்பழம் எனக்கு கொண்டு வர வேண்டும்” என்று ராமதாஸ் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred