வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில், ரசிகர்களைப் பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்று சொன்ன ரஜினி, இந்தமுறை ரசிகர்கள் விருப்பப்படி கொண்டாடட்டும் எனக் கூறி இருக்கிறார்.

இந்தத் தகவல் ரசிகர் மன்றத்தினர் மத்தியில் தீயாகப் பரவிவருகிறது. அதேபோல், பிறந்தநாள் முடிந்த பத்து நாள்களில் ரஜினி, அவரது மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளைச் சென்னைக்கு அழைத்துப் பேசவிருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றுதான் அவரது ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டு இருக்கிறது.

“234 தொகுதிகளிலும் எங்கள் தலைவரின் புதிய கட்சி சின்னத்தின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள். ஒரு சில அரசியல் கட்சியினர்கூட எங்கள் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களையும் கட்சி சின்னத்திலேயே போட்டியிடவைக்கத் தலைவர் நினைக்கிறார். அது தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது”என்று ரசிகர்மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.