ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக  ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த மூன்று ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநில அரசு தனது கலால் வரிக்கொள்கையை இருமுறை திருத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கலால் வரிக்கொள்கை திருத்தத்தின்படி, அரசே சொந்தமாக மதுக்கடைகளைத் திறந்து மது விற்பனை செய்தது. ஆனால், இதில் போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மதுக்கடைகளைத் தனியாருக்கு ஏலத்தில் விற்பனை செய்ய திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த இரு திருத்ததிலும் அரசு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. 

அதனால் மதுபானத்தை மளிகைக்கடையிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது ஜார்க்கண்ட் அரசு. இதனை நடைமுறைப்படுத்தினால், ஆண்டுக்கு 1500 கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் எந்த மளிகைக் கடையும், ரூ.30 லட்சம் வருவாய் உள்ள மளிகைக் கடையும் மது விற்பனை செய்துகொள்ள அரசு சார்பில் உரிமம் அளிக்கப்படும் என முதலமைச்சர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே  ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியினால் ஏற்படும் சீரழிவுகளும், சட்டவிரோதமான ஊழல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போது அரசே ஜி.எஸ்.டி வரி செலுத்தும் மளிகைக் கடைகளில் விற்பனை செய்யலாம் எனக் கூறியுள்ளதால் செல்வந்தர்களுக்கு லாபமும், சாதாரண மக்களுக்கு குடியினால் ஏற்படும் தீங்கும் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.