கொரோனா காலத்தை மனதில் கொண்டு பதவிப் பிரமாண நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே தனி மெஜாரிட்டியுடன் மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். நேற்று நள்ளிரவு சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் கூறுகையில், “தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ளனர். இந்த மகத்தான வெற்றிக்கு பொதுமக்களுக்கு இதயப்பூர்வமான நன்றி. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகம் ஒரு பாதாளத்திற்கு போயிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள். அதை சரி செய்ய திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி உள்ளனர்.
எந்த நம்பிக்கையோடு இந்த வெற்றியைத் தந்துள்ளனரோ அதற்கேற்ப பொறுப்பை உணர்ந்து திமுக ஆட்சி அதை நிறைவேற்றும். எங்களை கருணாநிதி வழி நின்று பொறுப்பேற்கக் கூடிய திமுக ஆட்சியில் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவோம். கருணாநிதி இருந்தபோதே ஆட்சி பொறுப்புக்கு வர விரும்பினோம். அது நிறைவேறவில்லை. அது எங்களுக்கு ஏக்கமாகவே இருந்தது. அந்த ஏக்கம் இன்று ஓரளவு நீங்கியிருக்கிறது. எங்களுக்கும் வாக்களிக்காதவர்களும், 'இவர்களுக்கு ஓட்டளிக்காமல் சென்று விட்டோமோ' என எண்ணும் வகையில் எங்கள் பணி தொடரும்.