எப்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியான தகவல் தெரிவித்துள்ளார். அதாவது பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (வியாழக்கிழமை) அறிவிப்பார் என அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக  தாக்கிதன் விளைவாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒட்டுமொத்த  தமிழகமும் முடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் -5 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது. நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை அதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் 14ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் கொரோனா பரவில் இருக்கும் சூழலில் பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி தமிழக முதலமைச்சர் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். எனவே எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் மாவட்ட வேட்டைக்காரன் கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 400க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு போனஸ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:  

நீட் தேர்வு பயிற்சியில் அரசு மாணவர்கள் 16,300 பேர் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்றார். பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு முகாமில் தமிழகம் முழுவதும் 45% பெற்றோர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் தெரிவித்த விருப்பத்தின்படி பள்ளிகள் திறப்பு குறித்து நாளை (வியாழக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என அவர் கூறினார்.