தமிழக சட்டப்பேரவையில் நடைபெற உள்ள ராமசாமி படையாச்சியார் படத் திறப்பு விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியார் படத் திறப்பு விழா நாளை மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவுருப் படத்தை திறந்துவைக்க உள்ளார். விழாவில் பங்கேற்க அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன. பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த விழாவில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


பாமக என்ற கட்சியை ராமதாஸ் தொடங்கியபோது, என்னுடைய கால் செருப்புக்கூட சட்டப்பேரவைக்கோ நாடாளுமன்றத்துக்கோ செல்லாது என்று சத்தியம் செய்தார். அதன்படி அவர் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. ஆனால், அவருடைய மகன் அன்புமணி தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராவது தனிக் கதை.  ஏற்கனவே செய்த சத்தியத்தின் அடிப்படையில் தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடத்தில் திறக்கப்பட உள்ள திருவுருவ படத் திறப்பு விழாவில் பங்கேற்பாரா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது.


ஏற்கனவே 2001 - 03 காலகட்டத்தில் ஜெயலலிதாவையும் 2008-ல் கருணாநிதியையும் கோட்டையில் சந்தித்து பேசியிருக்கிறார் ராமதாஸ். ஆனால், அந்தச் சந்திப்புகள் முதல்வர் அறையில் நடைபெற்றது. 2003-ல் அதிமுகவுடன் கூட்டணி முறிந்த பிறகு, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டும் என்னை கோட்டைக்கு வரவைத்தார் என்று விமர்சித்தார் ராமதாஸ். அந்த அளவுக்கு சட்டப்பேரவை அமைந்துள்ள கோட்டைக்கு செல்வதில்லை என்பதில் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார். ஆனால், தற்போது விழா நடக்க இருப்பது சட்டப்பேரவை கூட்ட அரங்கு. பழைய சத்தியத்தை மீறி, ராமதாஸ் சட்டப்பேரவைக்கு வருவாரா என்பதுதான் சந்தேகமாக உள்ளது.
இதுகுறித்து பாமக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ ராமசாமி படையாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில்  டாக்டர் ராமதாஸ் பங்கேற்கலாம்’ என்று தெரிவித்தார்கள். ராமதாஸ் பங்கேற்பாரா இல்லையா என்பது நாளை தெரிந்துவிடும்.