ரஜினி பாஜக தலைவராகப்போவதாக வெளியாகி வரும் தகவல்களால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார் ரஜினி. எந்த கட்சியிலும் தான் சேரப்போவதில்லை என்றும் புதிதாக கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் அப்போது அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என்றும் ரஜினி அறிவித்தார். அவர் கூறி 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளில் தேர்தல் வர உள்ளது.

 

இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் முத்திரை பதிக்கும் முடிவுடன் பாஜக தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்றாக கருதப்படும் நாடார்களை மகிழ்விக்கும் வகையில் தமிழிசைக்கு ஆளுநர் பதவி கொடுத்தது கூட மிகப்பெரிய அரசியல் நகர்வு என்றே பார்க்கப்படுகிறது. தமிழிசை ஆளுநரானதால் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகியுள்ளது. 

அந்த இடத்தில் ரஜினி நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பை ஏற்கும் படி ரஜினியிடம் பாஜக மேலிடம் நேரடியாகவே பேசி வருவதாக சொல்கிறார்கள். தனிக் கட்சி எல்லாம் வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் பாஜக தலைவரானால் போதும் என்கிறார்கள். ஆனால் ரஜினி எவ்வித முடிவும் எடுக்காமல் தீவிர சிந்தனையில் இருந்து வருகிறார். தற்போது மும்பையில் உள்ள ரஜினியை விரைவில் பாஜக பிரபலம் ஒருவர் நேரில் சென்று பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதற்கிடையே ரஜினி பாஜக தலைவராகப்போவதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தனிக்கட்சி என்று கூறிய ரஜினி பாஜக தலைவரானால் ரசிகர் மன்றங்கள் என்ன ஆகும் என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுந்துள்ளது. 

மேலும் பாஜக தலைவரான பிறகு நமக்கு எப்படி பொறுப்புகள் கிடைக்கும் ஏற்கனவே பாஜகவில் பொறுப்பில் உள்ளவர்களால் ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா? என்றெல்லாம் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனை அடுத்து சென்னை ரஜினியின் மக்கள் மன்ற அலுவலகம் போல் செயல்பட்டு வரும் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்கு தினமும் நிர்வாகிகள் கால் செய்து தலைவர் பாஜக தலைவராகப்போகிறாரா? என்கிற ஒரே கேள்வியை கேட்டு வருவதாக சொல்கிறார்கள். 

யார் கால் செய்தாலும் பொறுமையாக இருங்கள், அவசரப்படாதீர்கள் என்கிற பதில் தான் தலைமையிடம் இருந்து நிர்வாகிகளுக்கு கிடைப்பதாக சொல்கிறார்கள். இதனால் இந்த விவகாரத்தில் விரைவில் ரஜினியிடம் இருந்து விளக்கம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.