நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


அதிமுகவிலிருந்து விலகி தினகரனை நம்பி 18 எம்.எல்.ஏ.க்கள் முகாம் மாறினார். அவர்களுடைய எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 14 பேர் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் 3 பேர் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இடைத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் என்று தினகரன் நம்பினார். ஆனால், தேர்தலில் அமமுக படுதோல்வியைச் சந்தித்தது. 


தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த தினகரன், மீண்டும் பீனிக்ஸ் பறவையைப் போல எழுந்துவருவோம் என்று தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில்  ‘கட்சியிலிருந்து யார் வேண்டுமானாலும் செல்லலாம்’ என்று கூறினார். ஏற்கனவே தோல்வியால் வருத்தத்தில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு, தினகரனின் இந்தப் பேச்சு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் தோல்வி குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் விசாரித்தபோது, “கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் போகலாம். யாரையும் இங்கே இருக்க சொல்லவில்லை’ என்று தினகரன் கூறியதால் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் கட்சி தலைவர் இப்படி பேசினால் என்ன செய்வது? சசிகலா, தினகரனுக்காகத்தானே அவர்கள் அணி மாறினார்கள். இதனால், தினகரன் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை சிலர் புறக்கணிக்கக்கூடும்” என்று தெரியவந்தது.


தேர்தல் தோல்விக்கு பிறகு சைலண்ட் மோடுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள பலர் சென்றுவிட்டார்கள். அவர்கள் அதிமுகவில் இணைவது பற்றி யோசித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளின் அடிப்படையிலும் பங்கேற்காத நிர்வாகிகளின் மனநிலையும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.