கோயில் குடமுழக்குங்களை தமிழில் நடத்த சொல்லும் திக,  திமுகவினர் முஸ்லீம் மசூதிகளில் நமாஸ் செய்வதை தமிழில் செய்ய சொல்வார்களா என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வழக்கம்போல சூடாகவும் அதிரடியாகவும் பல கருத்துகளை அவர் தெரிவித்தார். “பெருந்துறை, கோவை, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் வெளிநாட்டினரை குறைந்த கூலிக்காக வேலைக்கு வைத்துள்ளது பெரும் தவறு. அந்நிய நாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. இதை எந்த தேசபக்தனும் செய்யமாட்டார். சட்டவிரோதமாக தங்கியுள்ளா வெளிநாட்டினரை தமிழக அரசு கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும்.

 
திமுகவை முஸ்லிம் லீக்காக மு.க. ஸ்டாலின் மாற்றி வருகிறார். திமுக தொண்டர்களேகூட அதை விரும்பவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது யாருடைய உரிமையையும் பறிப்பது அல்ல. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை முஸ்லிம்கள் மட்டும் நடத்திவருகின்றனர். இந்து கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று திமுகவினர் திகவினர் சொல்கிறார்கள். முஸ்லிம் மசூதிகளில் நமாஸ் செய்வதை அவர்கள் தமிழில் செய்ய சொல்வார்களா?” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.