பாஜக ஆதரவாளர்கள் சிலர்  நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளருமான குஷ்புவும், அருடைய கணவரும் இயக்குநகருமான சுந்தர் சி ஆகியோர் பாஜகவில் சேரப்போவதாக சமூக ஊடங்களில் தெரிவித்தனர். இதை குஷ்பு மறுத்தார். ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசை தினந்தோறும் ட்விட்டர் வாயிலாக விமர்சித்துவரும் நிலையில், பாஜக கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஆதரித்து குஷ்பு ட்வீட் செய்தார். ‘ராகுல் காந்தி மன்னிக்க வேண்டும். நான் கட்சித் தலைமைக்கு தலையாட்டை பொம்மையாக இருக்க மாட்டேன்’ என்ற வார்த்தைகளையெல்லம் குஷ்பு பயன்படுத்தி இருந்தார். இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தின.


குஷ்புவின் ஆதரவு நிலைப்பாடுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதிருப்தி தெரிவித்தார். இதேபோல கரூர் எம்.பி. ஜோதிமணி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் குஷ்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் குஷ்புவின் ஆதரவு ட்வீட் பதிவை பாஜகவினர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தங்கள் வாட்ஸ்அப் குழுக்களில் வேகமாகப் பரப்பினர். குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக வாட்ஸ் அப் குழுக்களில் பாஜகவினர் ஷேர் செய்தனர். இதை அறிந்த குஷ்பு, ‘சங்கிகள் ஓய்வெடுக்கலாம். நான் பாஜகவில் சேரமாட்டேன். காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பேன்’ என்றும் குஷ்பு மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டார்.
குஷ்பு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிறகும், காங்கிரஸ் கட்சியில் இன்னும் அதிருப்தி அகலவில்லை. காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் குஷ்புக்கு எதிராக கட்சி மேலிடத்துக்கு புகார்களை அனுப்பியவண்ணம் உள்ளனர். குஷ்புக்கு எதிராக ட்விட்டரிலும் கருத்திட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில நிர்வாகி ஜி.கே. முரளிதரன் கூறுகையில், “அவர் ஏதோ முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. அது என்னவென்று தெரியவில்லை. கடந்த 6 மாதங்களாகவே காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராக பல விஷயங்களை ரீட்வீட் செய்துள்ளார். எனவே அவர் ஏதோ சமிக்ஞை கொடுப்பதாகவே காங்கிரஸார் உணர்கிறார்கள். அதனால்தான் சமூக ஊடகங்களில் காங்கிரஸார் குஷ்புக்கு எதிராக கடுமை காட்டுகிறார்கள்” என்று  தெரிவித்தார். 


இதேபோல பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இஸ்லாமியர்களைக் கவர நன்கு அறியப்பட்ட முஸ்லீம் பிரமுகர்களுக்கு பதவிகளை வழங்க பாஜக தயாராக உள்ளது. எனவே, குஷ்பு அதை அடைய நினைக்கலாம். அதனால் அவர் இப்படி செய்கிறார்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே குஷ்புக்கு எதிராக கட்சி மேலிடத்தில் புகார்கள் குவிந்துள்ளதால், காங்கிரஸ் மேலிடம் குஷ்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.