சென்ற ஆண்டு கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா செய்ததை இன்று குமாரசாமி செய்வார் என்கிறார்கள் கர்நாடக பாஜகவினர்.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 104 இடங்களில் பாஜக தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆனால், மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 80 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியும், 38 இடங்களில் வென்ற மஜதவும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இரு சுயேட்சைகள் காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரித்தார்கள். ஆனால், இப்போது 16 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராகத்திரும்பிவிட்டதால் குமாரசாமி அரசுக்கான ஆதரவு 101 ஆக குறைந்துவிட்டது. அதேவேளையில் 105 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு இரு சுயேட்சைகள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எனவே பாஜகவின் எண்ணிக்கை 107 ஆக குறைந்துள்ளது.
காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவிட்டால், சபை எண்ணிக்கை 209 ஆகக் குறைந்துவிடும். அப்போது ஆளும் கட்சி மெஜாரிட்டியை நிரூபிக்க 105 உறுப்பினர்கள் தேவைப்படுவார்கள். ஆனால், தற்போது குமாரசாமி அரசுக்கு 101 உறுப்பினர்களே உள்ளனர். கொறடா உத்தரவு அடிப்படையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தற்போது பாஜக முகாமிலிருந்து யாராவது மாறி வாக்களித்தாலோ அல்லது அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆப்செண்ட் ஆனாலோதான் குமாரசாமி அரசு தப்பிக்கும் நிலை உள்ளது.
இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் நடவடிக்கை முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று காங்கிரஸ், மஜத தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகிறார்கள். ஆனால், கடந்த ஆண்டு எடியூரப்பா முதல்வர் ராஜினாமா செய்ததைப் போல குமாரசாமி ராஜினாமா செய்துவிடுவார் என்று பாஜக தலைவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
சென்ற ஆண்டு 104 எம்.எல்.ஏ.க்களுடன் பதவியேற்ற எடியூரப்பாவை உடனடியாக சபையில் நம்பிக்கை வாக்குக் கோரும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், எதிர் முகாமிலிருந்து யாரும் உதவாததால், நம்பிக்கை வாக்கு கோரும் முன்பே பதவியை ராஜினாமா செய்வதாகச் சொல்லிவிட்டு சபையிலிருந்து வெளியேறினார் எடியூரப்பா. அதேபோன்ற நிலைதான் குமாரசாமிக்கும் இன்றும் ஏற்படும் என்று உறுதியாக கர்நாடக பாஜக தலைவர்கள் சொல்கிறார்கள்.
என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்திவிடும்.