நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று வெளியாகி உள்ள தகவலால் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் , மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுவருகிறது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை செய்துவருகிறது.  நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அந்த வேலையை மூட்டை கட்டி வைத்திருந்த பாஜக, தற்போது மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கையில் எடுத்திருக்கிறது.
 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால், அந்த உற்சாகத்தில் கர்நாடகாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவிலும் எதிரொலித்தால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் இடையே மோதல் போக்கு முற்றியுள்ளது. இரு கட்சித் தலைவர்களும் ஒருவரையொருவர் தாக்கி பேசிவருகிறார்கள். இதனாலும் கர்நாடகாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே நாளை தேர்தல் முடிவு வெளியாகும்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவார்கள் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.  “கர்நாடகாவில் 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். தேர்தல் முடிவு வெளியாகும்போது 20-22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவார்கள். அவர்களுக்கு இந்தக் கூட்டணி ஆட்சியில் விருப்பம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.