அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி.தினகரன் பதிவு செய்து அதன் பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளதால் அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கு என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

அதிமுகவில் ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக கட்சியை தொடங்கினார். அக்கட்சியின்  பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகித்தனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர்.

அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால், அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். எனினும், உச்ச நீதிமன்றம் சென்று பரிசுப்பெட்டி சின்னத்தை டிடிவி தினகரன் பொதுச்சின்னமாக பெற்றார். இந்நிலையில், அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில்  டி.டி.வி.தினகரன் பதிவு செய்ய உள்ளார். 

அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் முடிவெடுத்துள்ளார். ஆக, அமமுகவை தன் வசம் வைத்துக் கொண்டு சசிகலா மூலம் அதிமுகவை வளைக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் டி.டி.வி.தினகரன்.