Asianet News TamilAsianet News Tamil

தமிழக மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்த அதிமுக.. எடப்பாடியை ஏடாகூடமாக விமர்சித்த ஸ்டாலின்..!

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? மருத்துவ சேர்க்கை தொடர்பாக அரசு கையறு நிலையில் இருப்பதால் பெற்றோர்கள், மாணவர்கள் தவிப்பு என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Why is the Tamil Nadu government keeping silent on the issue of NEET medical entrance exam? mk stalin
Author
Tamil Nadu, First Published Aug 25, 2020, 1:06 PM IST

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? மருத்துவ சேர்க்கை தொடர்பாக அரசு கையறு நிலையில் இருப்பதால் பெற்றோர்கள், மாணவர்கள் தவிப்பு என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- "ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு எதிரான நீட் தேர்வு முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்பதிலும், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பின்பற்றியவாறு, பிளஸ் 2 வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையிலும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். திமுகவின் ஆதி அடிப்படையான இந்தக் கருத்தைத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

Why is the Tamil Nadu government keeping silent on the issue of NEET medical entrance exam? mk stalin

பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி இரு சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதில், பாஜகவுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, அதிமுக அரசு பரிதாபமாகப் படுதோல்வி அடைந்துவிட்டது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை, சுயநல நோக்கில், நாடாளுமன்றத்தில் ஆதரித்தபோதும்கூட, அதிமுக அரசு நீட் சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து ஒப்புதல் பெறுவதில் கோட்டை விட்டுவிட்டு, தமிழக மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்து விட்டது.

Why is the Tamil Nadu government keeping silent on the issue of NEET medical entrance exam? mk stalin

நீட் தொடர்பான மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்து, அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன என்ற தகவல்கள் ஆதாரப்பூர்வமாக வெளியானபோதும், அதை மூடி மறைப்பதிலேயே முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு குறியாக இருந்தது. சமூக நீதியிலோ, ஏழை மாணவர்கள் நலனிலோ துளியும் அக்கறையற்ற அதிமுக அரசு, நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்குத் தேவையான முயற்சிகளை எடுக்காமல், திசைதிருப்பும் செயலிலேயே மாதங்களைக் கடத்திவிட்டது. சட்டப்பேரவையிலும்கூட உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்து தமிழக மக்களின் கண்களில் மண்ணைத் தூவ முனைந்தது.

Why is the Tamil Nadu government keeping silent on the issue of NEET medical entrance exam? mk stalin

சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி, மூன்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்தச் சட்ட மசோதாக்களின் தற்போதைய கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். இனியும் மவுனம் சாதிக்கக்கூடாது. கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் தருணத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாடு அரசோ, முதல்வரோ இந்தத் தலையாய பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பாராமுகமாக இருந்து வருவதில் இருந்தே அவர்களுடைய உள்நோக்கம் ஊருக்குத் தெரிந்துவிட்டது. பிளஸ் 2 வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முனைப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கப் போகிறது என்பதில் நிலவும் குழப்பம் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் உள்ளனர்.

Why is the Tamil Nadu government keeping silent on the issue of NEET medical entrance exam? mk stalin

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டி, அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான அனுமதி தொடங்கும் என்று சொல்லி, பிரச்சினையைத் திசை திருப்ப முதல்வர் பழனிசாமி எடுக்கும் முயற்சி, தமிழக மாணவ - மாணவியரிடம் நிச்சயம் பலிக்காது. தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, நமது கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்கச்செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறேன்.

நீட் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதில் அடைந்த படுதோல்வியை மூடி மறைக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அமைச்சரவை கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. 'இது குறித்து அவசரச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று முதல்வர் நேற்று திடீரென அறிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டது ஏன்?

Why is the Tamil Nadu government keeping silent on the issue of NEET medical entrance exam? mk stalin

ஏழு தமிழர்களை விடுவிப்பது தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் பல ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் போல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு முடிவும் அமைந்துவிடத் தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா அல்லது மாநில அரசின் உரிமையைச் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து தட்டிக் கேட்கப்போகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளத் தமிழ்நாடே ஆவலாக இருக்கிறது. பல்லாயிரம் கோடி டெண்டர், கொள்முதல் விவகாரங்களில் ஒவ்வொரு மாவட்டமாக ஓடோடிச் சென்று காட்டும் தீவிரத்திலும் அக்கறையிலும் கோடியில் ஒரு பங்கையேனும் மாணவர்கள் நலனில் காண்பிக்க முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும். இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios