Why is Rajini refusing to give his fans a handshake?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கை கொடுக்க மறுக்கிறார்...! இப்பவே இப்படின்னா... இவரெல்லாம் ஆட்சிய புடிச்சி மக்களுக்கு என்ன கிழிக்கப்போறாரு...! இப்படி ஏக வசனத்தில் ரஜினிகாந்தின் நடவடிக்கை குறித்து, சமூக வலைத்தளங்களில் எதிர் கருத்துகள் றெக்கை கட்டி பறக்கிறது. 

கடந்த சில நாட்களாக ரசிகர்கள் தரிசனம் என்ற பெயரில், ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார். சிலை போல நிற்கும் ரஜினிகாந்திடம், சொல்லி வைத்தாற்போன்று ஒவ்வொருவராக வந்து, கல் சிலையைக் கட்டிப்பிடிப்பதுபோல் வந்து கட்டிப்பிடித்து, எந்திரம் போன்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். ஆர்வக்கோளாறு ரசிகர்கள் சிலர் ஃசெல்பி எடுப்பதும், ரஜினியின் கையைப் பிடிப்பதும், போன்ற வேலைகளை செய்யும்போது, ரஜினியின் அடிப்பொடிகள், மன்ற தலைவர் சுதாகர், பி.ஆர்.ஓ. ரியாஸ் மற்றும் பவுன்சர்கள் அலறி அடித்து, அல்லேக்காக தூக்குகின்றனர்.

ஏன் இந்த மாற்றம்? ஏன் இந்த அதிரடி? ரஜினி என்ன தொட்டுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிய ஆளா? ரசிகர்களிடம் 'டிஸ்டன்ஸ் மெய்ன்டன்' பண்ணுகிறாரா? என பல கேள்விகள் அடுத்துடுத்து எழுத்தான் செய்யும். உண்மையில் என்ன நடந்தது? அல்லது நடப்பது என்ன? என்பது குறித்து அறிய ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தில் தீர விசாரித்தது ஏசியா நெட். ரஜினிகாந்த் கை கொடுக்க மறுப்பது ஏன் என்பது குறித்த பகீர் தகவல்கள் இதோ...

சிவாஜி தி பாஸ், எந்திரன் ஒன்று படப்பிடிப்புகளின்போதே ரஜினியின் உடல்நிலையில் மாற்றங்கள் மற்றும் கோளாறுகள் வெளிப்பட தொடங்கியது. தொடர் புகைப்பழக்கம், மது பழக்கத்தின் விளைவாக ரஜினியின் உடல்நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. எந்திரன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், திடீரென மயக்க நிலைக்கு சென்றிருந்தார் ரஜினி. அடித்துப்பிடித்து போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதித்தனர் குடும்பத்தினர்.

மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு கல்லீரல் நீர்கோப்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவரும் பிரபல சிறுநீரகவியல் நிபுணருமான டாக்டர் சௌந்தரராஜன், ரஜினியுடனே சென்று சிங்கப்பூர், மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து காப்பாற்றினார். மரணத்தின் விளிம்பை தொட்டுவிட்டு வந்த ரஜினிகாந்த், நீண்ட விடுப்பில் அமைதி காத்து ஓய்வெடுத்து வந்தார்.

ஆசை யாரைத்தான் விட்டது!

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கபாலி படத்தில் ஒப்பந்தமானார் ரஜினி. மலேசியாவில் படமாக்கப்பட்ட கபாலி படத்தின் இறுதிகட்ட நேரத்தில், உடல்நிலை மீண்டும் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. வேறு வழியின்றி, உறுப்பு மாற்று சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உறுப்பு மாற்று சிகிச்சையும் வெற்றிகரமாக
நடத்தப்பட்டது.

ஆனால், வெளியில் ரஜினி ஓய்வில் இருப்பதாக மட்டுமே சொல்லப்பட்டது. அதையும் மீறி உண்மை நிலையை வெளியிட்ட இணையதளங்கள் மீது பி.ஆர்.ஓ. ரியாஸ் மூலம் கமிஷனர் அலுவத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அந்த அளவிற்கு உண்மை வெளியே தெரியக்கூடாது என கவனமாக இருந்தனர் ரஜினியைச் சேர்ந்தவர்கள். ரஜினிக்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தனது உடல் உறுப்பைத் தானம் தந்தவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவருடனேயே இருக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் உடன் படித்த ரஜினியின் நேர்முக உதவியாளர் ஆவார். 

சுஸ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி போன்றோர் தங்களது உறுப்பு மாற்று சிகிச்சை குறித்து வெளிப்படையாக அறிவித்து விட்டே அதாவது மக்களுக்கு தெரிவித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் பின்கதை இப்படி இருக்க, தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் தற்காலிக ஓய்வு ஆகியவை காரணமாக ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு இழுத்துவிட வேண்டுமென பல சக்திகள் முட்டி மோதிக்கொண்டிருக்கினறன.

இதுவொரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கடந்த 20 ஆண்டுகளாக ஏங்கி ஏங்கி காய்ந்து கருவாடாகிப் போன ரஜினி ரசிகர்கள் ஒருபுறம். தற்போது ரஜினி சூழ்நிலை கைதியாகவே மாறியுள்ளார் என்பதுதான் உண்மை. இந்த சூழ்நிலையில்தான் ரசிகர்கள் கட்டாயத்திற்காகவும், மக்களின் 'பல்ஸ் எபஃக்ட்' எப்படி உள்ளது என்பதை அறியவும்தான், ரசிகர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

இது மட்டுமன்றி காலா திரைப்படம் விரைவில் வெளியிட்டாக வேண்டி உள்ளதும் ஒரு காரணமாம். வர்ஜீனியாவில் சிகிச்சை மேற்கொண்டரஜினி, மிகவும் கவனத்தோடும், உஷாராக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனராம். குறிப்பாக மற்ற மனிதர்களிடம் உள்ள கிருமிகள் மற்றும் நோய்த்தொற்று தாக்காதவாறு, ரஜினி தன்னை பாதுகாத்துக் கொள்வது மிகுந்த அவசியமாக உள்ளது. எனவே, மருத்துவ காரணங்களாக மட்டுமே ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு கைகொடுப்பதை தவிர்த்து வருகிறாராம். மற்றபடி ரஜினிகாந்துக்கு யாரையும் உதாசீனப்படுத்தும் எண்ணமும் இல்லை, விலகி நிற்கும் அவசியமும் இல்லை என அடித்துக் கூறுகின்றனர் ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தினர். 

பின் குறிப்பு: முன்பெல்லாம் எந்த ரசிகர் வந்தாலும், ரஜினி தனது கையை ரசிகர்களின் தோள்மேல் போட்டுதான் போட்டோவுக்கே போஸ் கொடுப்பார். இது அனைவரும் அறிந்த ஒன்று. மற்றபடி உண்மையைச் சொல்லப்போனால், சூழ்நிலைக் கைதியாக மாறிப்போன ரஜினி, ரசிகர்களைத் தொட முடியவில்லை; சகஜமாக இருக்க முடியவில்லை என்ற மனப்புழக்கத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது.