Why do we attend the meeting and praise Stalin
ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அவர் தன்னை கருணாநிதி போல நினைத்துக்கொண்டிருக்கலாம். கருணாநிதி மட்டும் இதை செய்திருந்தால் நாந்தான் முதல் ஆளாக இருந்திருப்பேன் என தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் “தி டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்; திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அனைத்துக் கட்சி கூட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துமே ஸ்டாலினைச் சுற்றியே உள்ளன. ஏன் மற்ற கட்சிகளுக்குத் தனிப்பட்ட அரசியல் நிலைபாடு இருக்கக் கூடாதா? இவர் சொல்றத தான் கேட்கணுமா? இந்த மாதிரி ஆமாம் போடுற கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து பேசணும்? ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அவர் தன்னை கருணாநிதி போல நினைத்துக்கொண்டிருக்கலாம்.
கருணாநிதி மட்டும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தால் முதல் ஆளாக இந்த விஜயகாந்த் பங்கேற்றிருப்பான். ஸ்டாலினை எனக்குப் பிடிக்காது. நான் அவரை எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என காட்டமாக கூறியுள்ளார்.கருணாநிதியின் உடல்நலம் பற்றும் அவரை சந்திக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கருணாநிதிக்கு உடல் நலம் குன்றியபோது முதல் ஆளாகச் சென்று அவரை சந்தித்து உடல் நலம் பற்றி விசாரிக்க நான் விரும்பினேன். அவருடன் நீண்ட நாட்கள் பழகியுள்ளேன். நானும் அவரும் பல தடவை உடனுக்குடன் நேரில் சந்தித்துப் பேசி உள்ளோம்.
ஆனால், இம்முறை அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. நானும் வேறு வழியில் சந்திக்க முயற்சி செய்தேன். அப்போது ஸ்டாலினிடம் பேசுங்கள் என சொன்னார்கள். பிறகு ஸ்டாலின் தரப்பிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் மீண்டும் பேசிய அவர்கள் உரிய நேரத்தில் அழைப்பதாகச் சொன்னார்கள். பிறகு ஒருநாள் அவர்கள் தரப்பிலிருந்து பேசினார்கள்.

அப்போது, இன்று சூரசம்ஹாரம் என்பதால் நாள் சரி இல்லை என்று சொன்னார்கள். நானும் சரி என்றேன். நல்ல நாளில் கருணாநிதியை சந்திக்கலாம் என்று இருந்தேன். அவர்கள் எங்களை அனுமதிக்கவே இல்லை. அதன் பிறகு நானும் சந்திக்க முயற்சி செய்வதை கைவிட்டுவிட்டேன்.கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என்று முதல் ஆளாக நான் கேட்ட போதும் அவரை நான் சந்தித்துப் பேசக் கூடாது என்று ஸ்டாலின் திட்டமிட்டு என்னை தடுத்துவிட்டார். என்னப் பார்த்து ஏன் ஸ்டாலின் பயப்பட்டார் என இன்னும் தெரியவில்லை” என்று கூறினார்.
