தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக புதிய முகத்தை திமுக தலைமை களமிறக்கியுள்ளது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. இதில் அதிமுக எம்.பி. முகமது ஜானின் உயிரிழப்பால் ஏற்பட்ட காலியிடத்துக்கு செப்.13 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதி. இப்பதவிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த கார்த்திகேய சிவசேனாதிபதி, தங்கதமிழ்ச்செல்வன் உள்பட பல பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் திமுக வேட்பாளராக புதுக்கோட்டையைச் சேர்ந்த வெளிநாடுவாழ் தமிழர் நல அணி இணை செயலாளர் எம்.எம்.அப்துல்லாவை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பற்றி திமுக தொண்டர்கள் மத்தியில்கூட கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அப்துல்லா அறிவிக்கப்பட்டதின் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்ததால், இஸ்லாமியர்களின் ஆதரவை இழந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும், ஒத்தி வைக்கப்பட்டு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வேலூரைச் சேர்ந்த முகமது ஜானை 2019-இல் வேட்பாளராக அறிவித்து எம்.பி. ஆக்கியது அதிமுக தலைமை.
இதேபோல 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டபோதும் அதில் இஸ்லாமியர்கள் யாருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட நவாஸ் கனி, தங்கள் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி திமுகவினர் சமாளித்தனர். தற்போது முகமது ஜான் காலியிடத்துக்கு இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், மற்றவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால், அது இஸ்லாமியர்களைச் சங்கடப்படுத்தும் என்பதால், இஸ்லாமியரையே திமுக வேட்பாளராக அறிவித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் மாநிலங்களவையில் திமுக சார்பில் 7 பேர் இருக்கிறார்கள். அதில், கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த வில்சன் எம்.பி.யாக இருக்கிறார். ஆனால், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் திமுக சார்பில் இஸ்லாமியர்கள் ஒருவரும் எம்.பி.யாக இல்லை. இதையெல்லாம் கூட்டி கழித்துதான் அப்துல்லாவை திமுக தலைமை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அப்துல்லா 2025-ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்.
