நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு கூட்டணியும் காரணம் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புத, புநீக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைந்தது. இந்தக் கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி பாஜகவே காரணம் என்று தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது பேசிவந்தார்கள். அதன் எதிரொலியாக வேலூர் தேர்தல், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பாஜகவை ஓரங்கட்டிவிட்டு அதிமுக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது.


இந்நிலையில் தனியார் ஆங்கில சேனல் சார்பில் டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். “நாட்டிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக கட்டிக்காப்பதில் தமிழக அரசு திறமையோடு செயலாற்றிவருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநிலம் முழுவதும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.


என்றாலும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட தவறான பிரசாரத்தால் அதிமுக படுதோல்வி அடைய நேரிட்டது. இந்தத் தோல்விக்கு அதிமுக கூட்டணியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனென்றால், இந்தக் கூட்டணி கடைசி நிமிடத்தில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், எதிர்கட்சி தரப்பில் ஆரம்பம் முதலில் இருந்தே கூட்டணி என்பது வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருந்தது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியும் ஒரு காரணம் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்போம் என கூட்டணி கட்சிகளுக்கு கிலி கொடுத்தார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு கூட்டணியும் ஒரு காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.