நாடாளுமன்றத்தில் கடந்த முறை போல துணை சபாநாயகர் பதவி மாநில கட்சிகளுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு  துணை சபாநாயகர் பதவி வழங்குவது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை சபாநாயகராக  தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை அந்தப் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் யார் வருவார் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களில் வெற்றி பெற்றபோதும், அந்தக் கூட்டணிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க பாஜக யோசித்தது. திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பிஜூ ஜனதாதளம் ஆகிய 3 மாநில கட்சிகளும் சேர்ந்து 90 எம்.பி.களை வைத்திருந்தனர்.  மாநில அதிக இடங்களை வைத்திருப்பதால், அந்தக் கட்சிகளுக்கு துணை சபாநாயகர் ஒதுக்குவது என்று பாஜக முடிவு செய்தது.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால், துணை சபாநாயகர் பதவியைப் பெறவும் அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை. இதன் அடிப்படையில் அப்போது 37 உறுப்பினர்களுடன் சென்ற அதிமுகவுக்கு துணை சபாநாயகர் வழங்க பாஜக முடிவு செய்தது. அதிமுகவுடன் இணைக்கமாக இருக்க விரும்பி பாஜக இந்த முடிவை எடுத்தது.


ஆனால், இப்போது காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் மட்டுமே வென்றதால், அந்தக் கூட்டணிக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பாஜக இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை வைத்தே துணை சபாநாயகர் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்பது தெரியவரும். காங்கிரஸ் கட்சி துணை சபாநாயகர் பதவியை முன்வருமா அல்லது கடந்த முறை போல மாநில கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்குமா என்பதும் இனிதான் தெரிய வரும். 
கடந்த நாடாளுமன்றத்தில் மாநில கட்சிகள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தன. இந்த முறை திரிணாமூல், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜேடி ஆகிய கட்சிகள் சேர்ந்து 57 உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.