தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்துள்ளதால், அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே பாஜக தோல்வியடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மண்ணைக் கவ்வினார்கள். இவர்கள் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். பாஜக அசுர பலத்தோடு மத்தியில் ஆட்சியில் அமரும் நிலையில், தமிழகத்தில் அக்கட்சிக்கும் கூட்டணிக்கும் வெற்றி கிடைக்காமல் போயிருப்பது அக்கட்சியினருக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் பெரும் வலியைக் கொடுத்திருக்கிறது.


தமிழகத்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கணிசமாக வெற்றி பெற்றிருந்தால், தமிழகத்தில் ஒரு சில அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்கும். தற்போது அதிமுக சார்பில் துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், கடந்த முறை பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக ஓரிடத்தில் வென்றபோதும், அந்தக் கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.


ஆனால், மக்களவையில் ஓரிடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வெற்றிருந்தாலும் மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அக்கட்சி பெற்றுள்ளது. மாநிலங்களவையில் அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு கண்டிப்பாக தேவை. அந்த அடிப்படையில் அமைச்சர் பதவியை பாஜக வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

 
அதே வேளையில் தமிழக பாஜகவைச் சேர்ந்த இல. கணேசன் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். எனவே அவருக்கு மோடி அமைச்சர் பதவி வழங்கி, தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிப்பாரா என்ற பேச்சுகளும் அரசியல் அரங்கில் உலாவருகிறது. தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பும் பாஜகவுக்கு இருப்பதால், இல. கணேசன் அல்லது வேறு யாருக்காவது அமைச்சர் பதவி கிடைக்கும் அக்கட்சி வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.