திமுக கூட்டணியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்துக்கு பயன் இல்லை என்று பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.

அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, ’’37 எம்.பிகள் டெல்லியில் போய் என்ன செய்யப்போகிறார்கள்? இவர்கள் யாராவது போய் பிரதமரை பார்க்க முடியுமா? பிரதமரிடம் ஏதாவது கோரிக்கை வைக்க முடியுமா?

பிரதமர் என்னிடம் ‘தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்டார். அந்த 7 பேர் இரட்டை ஆயுள் தண்டனைக்கு மேல் அனுபவித்து விட்டார்கள் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது எனச் சொன்னேன். பேரறிவாளன் எந்தத் தப்பும் செய்யாதவர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து விட்டது. தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அவர்களை விடுதலை செய்யுங்கள் எனக் கூறினேன். அதை கேட்டுவிட்டு பிரதமர் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கிறேன் எனக் கூறினார்’ என அவர் தெரிவித்தார். 

அதேவேளை 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை அழைத்துக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். எதிரும் புதிருமாக உள்ள பாமக, விசிக ஆகிய இரு கட்சிகளும் ஒரே விவகாரத்தை கையில் எடுத்து இருக்கிறது. இதில் யாருடைய கோரிக்கைக்கு பாஜக அரசு செவிசாய்க்கும் என்பது கேள்விக்குறியே..!