கே.கே. நகரில் கல்லூரி வாசலில் கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினிக்கும் கொலையாளி அழகேசனுக்கும் கடந்த மாதமே திருமணம் நடந்து முடிந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்நிலையில் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடித்துவிட்டு சில மணி நேரத்திற்கு முன்பு கல்லூரி வாயிலின் வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அஸ்வினியை ஒரு நபர் கத்தியால் குத்தினார். இதில் மாணவி ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடினார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் அஸ்வினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் மாணவியை கத்தியால் குத்திய நபரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், அஸ்வினி மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் கொலையாளி பெயர் அழகேசன் எனவும் அவரும் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. 

மேலும் அழகேசன் தொந்தரவால் அஸ்வினி ஜாபர்கான்பேட்டையில் உறவினர்கள் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்ததாக கூறப்பட்டது. 

அழகேசன் குறித்து ஏற்கனவே அஸ்வினி போலீசில் புகார் அளித்ததாகவும் அதில் தன்னை அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும்  தகவல் வெளியானது. 

இதனால் ஆத்திரமடைந்த அழகேசன் திட்டமிட்டு அஸ்வினியின் கல்லூரி அருகே வைத்து அவரை கழுத்தறுத்து கொலை செய்ததாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினிக்கும் கொலையாளி அழகேசனுக்கும் கடந்த மாதமே திருமணம் நடந்து முடிந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

காதல் திருமணம் பெற்றோருக்கு பிடிக்காததால் பிரித்து வைத்ததாகவும் அதனால் அழகேசன் அஸ்வினியை கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து தற்போது மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்த அழகேசன், மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் என்பது தெரியவந்துள்ளது.