பொன்முடி வழக்கை நீங்க விசாரிக்க கூடாது!வேறு நீதிபதிக்கு மாத்துங்க!என்ன முடிவு எடுக்க போகிறார் ஆனந்த் வெங்கடேஷ்
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கின் மறு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட வேண்டும் என்ற அமைச்சரின் மனுவிற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை எடுத்துள்ளார். அமைச்சர் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி உள்ளிட்டோர்களின் வழக்கு மறு விசாரணை செய்ய இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடர்பான வழக்கும் விசாரிக்க இருப்பதாக கூறினார்.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை பல ஆண்டு காலமாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் முறையீடு செய்யாத காரணத்தால், தாமாக முன் வந்து இந்த வழக்கை மறு விசாரணை செய்ய இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் வந்த போது அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், கடந்த ஜூன் மாதம்தான் இந்த வழக்கில் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக தாமாக முன்வந்து விசாரணக்கு எடுக்கப்படும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார்.
ஆனால் இந்த வழக்கில் நடைமுறை வழக்கத்தைத் தாண்டி தலைமை நீதிபதியின் பார்வைக்காக மட்டுமே அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்த நீதிமன்றமோ, நீங்களோ விசாரிக்க அதிகாரம் கிடையாது என வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக இன்று தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா? அல்லது நீதிபதி ஆன்ந்த வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிப்பாரா இன்று முடிவு தெரியவுள்ளது.