அரசியலுக்கு வருமாறு தொடர்ந்து போஸ்டர்கள் அடித்து விருப்பம் தெரிவித்த ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் விஜய் சில முக்கிய தகவல்களை கூறி அனுப்பியுள்ளார்.

திரைப்படங்களில் நடித்து வந்த ரஜினியை அரசியலில் வாய்ஸ் கொடுக்க வைத்தது ஜெயலலிதா. அதே போல் திரைப்படங்களில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்த விஜயை அரசியல் நாயகனாக மாற்றியது திமுக என்றே கூறலாம். ரசிகர் மன்றம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக ஆட்சியில் செய்யப்பட்ட இடையூறை தொடர்ந்தே நடிகர் விஜய் கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் விஜய் ரசிகர் மன்றம் மூலம் ஜெயலலிதாவிற்காக தேர்தல் பணிகளிலும் விஜய்ஈடுபட்டார்.

அப்போதே கூட விஜயின் தந்தை எஸ்ஏசிக்கு எம்பி பதவி தர ஜெயலலிதா முன்வந்தார். ஆனால் எஸ்ஏசி விஜய் ரசிகர்கள் 20 பேருக்கு அதிமுக சார்பில் சீட் கேட்டார். ஆனால் அதனை தர ஜெயலலிதா மறுத்துவிட்டார். இருந்தாலும் திமுகவிற்கு தங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே அதிமுகவிற்காக விஜய் ரசிகர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் தேர்தல் முடிந்த உடனேயே ஜெயலலிதாவால் விஜய்க்கு நெருக்கடி ஆரம்பமானது. அதிமுக ஆட்சியில் விஜய் படங்களை ரிலீஸ் செய்வதே பெரிய பிரச்சனை ஆனது.

இதனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியை விஜய் ஆதரித்தார். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மோடி அரசை விஜய் விமர்சித்தார். இதனால் வருமான வரித்துறை மூலம் விஜய்க்கு பிரச்சனை ஏற்படுத்தப்பட்டது. பிறகு விஜய் படங்களுக்கு சென்சார் போர்டு அனுமதி கொடுப்பதிலும் மத்திய அரசு கெடுபிடி காட்டியது. இதற்கிடையே சர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சித்த காரணத்தினால் அதிமுகஅரசின் கோபத்திற்கு விஜய் ஆளானார்.

இப்படி திமுக, பாஜக, அதிமுக என முக்கிய கட்சிகளுடன் விஜய் விரோதத்தை வளர்த்து வைத்துள்ளார். இதனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விஜய்க்கு சிக்கல் உள்ளது. அதே சமயம் திமுக தரப்பில் இருந்து விஜய்க்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஒரு வேளை ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால், விஜய் திமுகவிற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எஸ்ஏசியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறுகிறார்கள். இதற்காக பல வலுவான வாக்குறுதிகளை எஸ்ஏசி தரப்பு பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்கள். இந்த நிலையில் தான் விஜயை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இப்படி போஸ்டர் ஒட்டிய பலரும் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள். எனவே விஜய் அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை தனது வீட்டிற்கு அழைத்து விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த ஆலோசனையாகவே இருந்துள்ளது. தற்போதைய அரசியல் கள நிலவரம் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்து விஜய் நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததாக சொல்கிறார்கள். அப்போது நிர்வாகிகள் பலரும் விஜயை அரசியல் கட்சி ஆரம்பிக்குமாறு வெளிப்படையாக கூறியதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக தனது ரசிகர் மன்றம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாகவும் அதனை தற்போது தெரிவிக்க முடியாது தேர்தல் வரை பொறுமையாக இருக்கும் படி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் விஜய் கூறியதாகவும் பேசுகிறார்கள். அது என்ன முடிவு என்றால் அதிமுக – திமுக கூட்டணிக்கு மாற்றாக உருவாகும் கூட்டணியை ஆதரிப்பது தான் என்று சில நிர்வாகிகள் கூறுகிறார்கள். இப்படி ஒரு கூட்டணியை அமைக்க விஜய் தரப்பே கூட முயலலாம்எ ன்றும் சொல்கிறார்கள். அதே சமயம் அதிமுக – பாஜகவை சமாளிக்க திமுகவை விஜய் ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.