நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு  25 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், ‘’அந்த இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டனர். அவர்களுக்கு 25 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. நம்மூர் அரசியலை பொறுத்தவரை கணக்கு காட்டிய தொகை கொஞ்சமாக இருக்கும். கணக்கில் காட்டாத தொகை அதிகம் இருக்கும். கணக்கில் காட்டாத தொகை அப்புறம் இருக்கட்டும். கணக்கில் காட்டப்பட்ட தொகையை என்ன செய்தீர்கள்? ஏன் கேட்க வேண்டியது இருக்கிறதென்றால் நாட்டிலேயே அதிகமாக வியாக்கிதம் பேசக்கூடியது இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள். 

இந்தக் கட்சி தேர்தல் வரும்போதெல்லாம் அக்கட்சியின் பத்திரிக்கையான கேரளாவில் இருந்து வெளியாகக் கூடிய மாத்ருபூமிக்கு 2 கோடி ரூபாயை லாட்டரி அதிபர் மார்டின் நன்கொடையாக வழங்கியுள்ளார். எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் பல்க்கான தொகையை பிறரிடம் இருந்து வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 

காசு கொடுத்தவனையே பல நாட்கள் கழித்து கொலைகாரன் எனச் சொல்லி போராட்டம் நடத்துவது அந்தக் கட்சியின் வாடிக்கை.  25 கோடி வாங்கியது உண்மையாக இருந்தால் அந்தக் கட்சியில் இருப்பவர்களின் பெரும்பான்மையானவர்கள் யோக்கியவான்கள் கிடையாது. இந்த பணத்தை வாங்கி யார் வாயில் போட்டார்கள். வாங்கவில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டும். வாங்கி இருந்தால் அதற்கு கணக்கு காட்ட வேண்டும்.

திமுக தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள செலவுக்கணக்கில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தோம் என்கிற தகவலை கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5.4.2019ல் 15 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் வங்கி பரிவர்த்தனை மூலம் நடைபெற்று இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5.4.2019 முதல் 9.4.2019 ஆகிய இடைப்பட்ட தினங்களுக்குள் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 

சரி இந்தப்பணம் எங்கே? கோயம்புத்தூர், மதுரை, நாகபட்டினம், திருப்பூர் ஆகிய 4 தொகுதிகளிலும் 50 லட்சம் செலவழித்திருப்பார்கள். அகில இந்திய அளவில் செலவளித்தாலும் இந்தக் கட்சிக்கு 7 கோடி ரூபாய் கூட செலவு ஆகி இருக்காது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவானதாக வைத்துக் கொண்டாலும் மீதி 24 கோடி ரூபாய் எங்கே போனது? யாரிடம் கொடுத்தீர்கள்? யார் வாயில் போட்டீர்கள்?  மக்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கிறது. 

கம்யூனிஸ்டு கட்சி இந்தப்பணத்தை வாங்கியது தவறு. ஒருத்தன் போய் கஷ்டப்பட்டு கொள்ளையடித்து விட்டு வருகிறான். உழைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் பங்கு போட்டு கொள்வது எந்த வகையில் நியாயம்?  முதலில் பணமே வாங்கவில்லை என்று மறுத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தப்பணத்தை குறிப்பிட்ட சில தலைவர்கள் வாங்கி வெள்ளைச்சட்டை போட்டுக் கொண்டு தங்கள் மனைவி, பிள்ளைகளின் பேரில் சொத்து வாங்கி குவித்துள்ளனர். நோகாமல் வாயில் போட்டுக் கொண்டு விட்டனர்’’ என அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.