ஆன்மீக அரசியலை முன்வைத்து, அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் காவி அரசியலை முன்னெடுப்பதாக கூறப்பட்டு வரும்நிலையில், அவருக்கே இயக்குநர் பா.ரஞ்சித் கருப்பு வண்ணம் பூசியுள்ளார். 

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். 

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படம்  ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.  காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார்.

இதனிடையே அவ்வபோது அரசியலுக்கு வருவனா மாட்டனா என்ற எதிர்ப்பார்ப்பை ரசிகர்களுக்கு கொடுத்து வந்த ரஜினி டிசம்பர் கடைசியில் முற்றுப்புள்ளி வைத்தார். 

அப்போது ஆன்மீக அரசியலை முன்வைத்து செயல்படப்போவதாக அறிவித்தார். இதனால் ரஜினி காவியைத்தான் விரும்புவதாகவும் அவருக்கு பின்னால் பாஜக செயல்படுகிறது எனவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில் காலா படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் ரஜினியை கருப்பு வண்ணங்களால் குளிப்பாட்டியுள்ளார். அதாவது, ரஜினி கருப்பு சட்டை, கருப்பு வேட்டி, கருப்பு கண்ணாடி, கருப்பு வாட்ச், என அனைத்திலும் கருப்பு நிறத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

காலா படத்தில் ஒரு சில புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பாக, ரஜினி ஒரு நாற்காலியில் கூலாக அமர்ந்திருப்பது போலவும், அவரது மேசையில் இராவண காவியம் மற்றும் சுவரில் கார்ல் மார்க்ஸின் படம் இருப்பது போலவும் இடம்பெற்றுள்ளது.

ஆர்யத்தை எதிர்த்து திராவிடம் பேசும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த புத்தகத்திற்கு 1948 ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.

ஆன்மீக அரசியலை முன்வைத்து, அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் காவி அரசியலை முன்னெடுப்பதாக கூறப்பட்டு வரும்நிலையில், அவருக்கே இயக்குநர் பா.ரஞ்சித் கருப்பு வண்ணம் பூசியுள்ளார்.