மண்புழு, மானங்கெட்ட பொழப்பு: சரியாதான் பேசுறாரா ஸ்டாலின்?

*    கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டபோது, தி.மு.க. நிறுத்த முயன்றது. நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகதான் இருக்கிறோம். ஆனால் கமல், ஸ்டாலின் உள்ளிட்டோர் அதை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை ஒரு பொருட்டாக நாங்கள் நினைப்பது இல்லை! எங்களின் ஒரே எதிரி தி.மு.க.தான். 
-    செல்லூர் ராஜு

*    கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது அ.தி.மு.க. அரசுதான். தேர்தல் நடக்காததால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய மூவாயிரம் கோடி ரூபாய் பங்கு தொகை வரவில்லை. தவறுகள் இல்லாமல் நேர்மையாக தேர்தலை நடத்துங்கள் என்றுதான் சொல்கிறோம்.
-    கே.எஸ்.அழகிரி

*    தெலுங்கானா மாநிலத்தில் டாக்டர் பிரியங்கா கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு பின் உயிருடன் கொடூரமாக எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
-    திருமாவளவன்.

*    திருப்பூர் மாவட்டம் அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் ராம்பிரகாஷ். அவிநாசியில் உள்ள ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். சில நாட்களுக்கு முன் பணி நேரத்தில், போதையில் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து, பெண்ணின் கணவரிடம் வாக்குவாதம் செய்ததோடு, வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 
-    பத்திரிக்கை செய்தி


*    முதல்வர் கனவில் நான் இருக்கிறேனாம்! ‘1989ல், எம்.எல்.ஏ.வாக நானும், ஸ்டாலினும் முதல் முறையாக, சட்டசபைக்குள் நுழைந்தோம். நான் முதல்வராகிவிட்டேன். ஆனால் அவரால் ஆக முடியவில்லை.’ என்று இ.பி.எச். பேசுகிறார். 
உண்மைதான். ஆனால், எனக்கு மண்புழு போல் ஊர்ந்து போய் முதல்வர் பதவி வாங்க தெரியாது. மானங்கெட்ட பிழைப்பு. நமக்கு சுய மரியாதை உள்ளது.
-    ஸ்டாலின்

*    நடிகர்கள் ரஜினியும், கமலும் இணைந்து அரசியல் செய்து, தமிழகத்தில் அதிசயத்தையும், மாற்றத்தையும் நிகழ்த்தப்போவதாக கூறுகின்றனர். அப்படி ஒன்றும் நடக்காது. தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு இடையில்தான் எப்பவும் போட்டி இருக்கும். நடிகர்களின் கட்சிக்கு மதிப்பு இருக்கவே இருக்காது.
-    ராஜேந்திர பாலாஜி

*    உள்ளாட்சி தேர்தலை வைத்து இதுவரையில் மக்களை ஏமாற்றி வந்த அ.தி.மு.க., தி.மு.க.வினர் இப்போது அவர்களின் சொந்தக் கட்சியினரையே ஏமாற்ற துணிந்துவிட்டனர். இதற்கெல்லாம் தீர்வு, 2021 சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பதுதான். 
-    மக்கள் நீதி மய்யம்

*    நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் இழப்பீடு தருவோம்! என உத்தவ் தாக்கரே ஏற்கனவே அறிவித்திருந்தார். இப்போது அவர் முதல்வராகிவிட்டார். எனவே தன் வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும். 
-    தேவேந்திர பட்னவிஸ்.

*    தேவேந்திர பட்னவிஸின் சிறுபிள்ளைத்தனமான பேச்சும், முதல்வர் பதவியை அடைய வேண்டும் எனும் அவசரமும், பா.ஜ.க.வை மூழ்கடித்துவிட்டது. பட்னவிஸின் அதீத நம்பிக்கை, அவரது அரசியல் வாழ்க்கையை அழித்துவிட்டது. 
-    சஞ்சய் ராவத்

*   கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும் அவர்  பல உன்னத திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதனால்தான் பா.ஜ.க.வில் இணைந்தேன்.
-    நமீதா

:    விஷ்ணுப்ரியா