தெலங்கானா முதல்வரும் டிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் உடனான சந்திப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தவிர்த்தது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.
 நாடாளுமன்றத்துக்கு ஐந்து கட்டத் தேர்தல் முடிந்துவிட்டன. இன்னும் 2 கட்டத் தேர்தல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மே 23-ம் தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணிக்கைக்காக அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. இதற்கிடையே தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்கும் முயற்சிக எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் - பாஜக அல்லாத கூட்டணியை ஏற்படுத்த முயற்சியைத் தொடங்கியுள்ள்ளார்.
பாஜக கூட்டணிக்கு இந்த முறை மெஜாரிட்டி கிடைக்காது என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. இதனால், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி ஏற்படுத்துவது சந்திரசேகர ராவின் நோக்கம் என்று கூறப்படுகிறது. 1996-ல் நடந்ததைப்போல மாநில கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியைக் கட்டமைத்தால், ஒரு வேளை காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரிக்க மத்தியில் கூட்டாச்சியை அமைக்கலாம் என்று சந்திரசேகர ராவ் கருதுகிறார். 
அதன் வெளிப்பாடகவே கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். மேலும் தென்னிந்தியாவில் கூட்டணியைக் கட்டமைக்கும் வகையில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேச சந்திரசேகர ராவ் திட்டமிட்டிருந்தார். ஸ்டாலினை சந்திப்பது குறித்து செய்திகளும் வெளியாகின. ஆனால், 4 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் தீவிர பிரசாரத்தில் இருக்கும் ஸ்டாலினுடன் உடனடியாக சந்திப்பு நடக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், இன்றோடு முதல்கட்ட  தேர்தல் பிரசாரத்தை ஸ்டாலின் நிறைவு செய்ய இருக்கிறார்.
இதனை தொடர்ந்து மு.க. ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதுவரை சந்திரசேகர ராவுக்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. சந்திரசேகர ராவ் மகளும், டி.ஆர்.எஸ். கட்சி  நாடாளுமன்ற உறுப்பினருமான கவிதா, “ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் இடையிலான சந்திப்பு இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் சந்திரசேகர ராவ் சந்திக்க நேரம் கேட்டவுடன் ஸ்டாலின் உடனே அதற்கு இசைவு தெரிவித்தார். தற்போது அவரை ஸ்டாலின் சந்திக்காமல் இருப்பதற்கு திமுக தரப்பில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன. “தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஒரே கூட்டணி கட்சி திமுகதான். இந்தச் சூழ்நிலையில் பாஜக - காங்கிரஸ் அல்லாத கூட்டணியை ஏற்படுத்த முயற்சிக்கும் சந்திரசேகர ராவை சந்தித்தால் தேசிய அளவில் ஸ்டாலினின் பெயர் கெடும். பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்துவிட்டு, கொல்கத்தாவில் மம்தா நடத்திய பேரணியில் பங்கேற்றதை எதிர்க்கட்சிகள் கிண்டலடித்ததை தவிர்க்கவே சந்திரசேகர உடனான சந்திப்பை ஸ்டாலின் தவிர்க்கிறார்” என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதே வேளையில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடாவையும் கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். எனவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் சந்திரசேகர ராவ் சந்திப்பை மேற்கொள்ளலாம் என்றும் ஸ்டாலினுக்கு திமுக மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ராகுல் பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ஆந்திரா காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.