தமிழகத்தில் தேர்தல் தேதிகளை பொறுத்தே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்தறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக 2019-20ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 9 மாதங்களாகப் பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கின்றனர். பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், பள்ளியில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வு மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது.

தற்போது ஆன்லைன் வகுப்புகளில் இணைய வசதி போன்ற பிரச்சினைகளால் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில், மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பில், வருகை பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு, தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.எனவே நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா, ஒருவேளை ரத்து செய்யப்பட்டால் தேர்ச்சி எதனடிப்படையில் அறிவிக்கப்படும் என பல்வேறு கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;-ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் அரசாக அதிமுக அரசு உள்ளது. மதநல்லினம் என்ற வகையில் அனைவரையும் அரவணைத்து செல்லும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி தமிழக முதல்வர் முடிவெடுப்பார். நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று அட்டவணை வெளியிடப்படும். 

மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனை பொறுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தேதிகள் குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.