ஊதிய உயர்வு, கொரோனா வைரஸ்  தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் சங்கம், தொமுச பேரவை சார்பாக மாநிலம் தழுவிய அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  16 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில்

2019-20 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும், 7 மாத காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை காலதாமதமின்றி உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தீபாவளி போனஸ் ஊக்கத் தொகையை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும்.  தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த ஊக்கத்தொகை 5 ஆயிரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், GVK-EMRI நிர்வாகமே, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பி.எல் விடுப்பு பணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வேண்டும். 2008 முதல் 2009 வரை ஐபிஎல் சலுகை விடுப்பு சம்பள தொகையை தொழிலாளர் ஆணையர் மூலம் 12(3) ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வழங்கிய GVK-EMRI 108 நிர்வாகம் வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான பி.எல் சலுகை விடுப்பு சம்பளத் தொகையை தர முடியாது என்று தொழிலாளர்கள் அனைவருக்கும் மறுப்புக் கடிதம் அனுப்பி வருகிறது. இந்த மறுப்பு கடிதத்தை ஏற்க முடியாது என்று பலமுறை தொழிற்சங்கம் மூலம் நிர்வாகத்தை வலியுறுத்தியும், மனு கொடுத்தும் 108 நிர்வாகம் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருந்துவருகிறது. எனவே நாங்கள் தெருவில் இறங்கி போராடும் நிலை உள்ளது. 

கொரோனா தொற்றால் உயிரிழந்த 108 ஊழியர் கணேசன் குடும்பத்திற்கு 50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், அரசு விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரட்டிப்பு சம்பளத்தில் தடை செய்யாமல் தொடர்ந்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஊதிய உயர்வை இன்னும் GVK-EMRI நிர்வாகமும், தமிழக அரசு வழங்கவில்லை. தமிழக அரசுக்கும் 108 நிர்வாகத்திற்கும் பலமுறை மனு கொடுத்தும் செவிசாய்க்கவில்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைபடித்திய 108 ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை மருத்துவ பரிசோதனை என்ற திட்டத்தை தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளொன்றுக்கு 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். பனிஷ்மென்ட் டூட்டியில் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் 108 தொழிலாளர்களை அவர்களது சொந்த மாவட்டத்திற்கு உடனடியாக மாற்ற வேண்டும். தொழிலாளர்களை பணி மாற்றம் செய்வதில் 108 நிர்வாகம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது, இந்த பணி மாறுதல் முறைகேடுகளை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். 

ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடங்களில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அச்சங்கம் அறிவித்துள்ளது. 108 நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பொது மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற மனப்பான்மையுடன், இரவு பகல் பாராமல் அயராது உழைக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎம்எஸ் இன்று பிற்பகல் வளாகத்தில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.