தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென குறுக்கே வந்த மாற்றுத்திறனாளி பெண், தனக்கு வேலைக் கேட்டு மனு ஒன்றை நீட்டினார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் அந்த பெண் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்து உடனே அவருக்கு 2 மணி நேரத்தில் சுகாதாரத்துறையில் பணி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.இச்சம்பவம் அந்த குடும்பத்தை மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம். முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான பெண் மாரீஸ்வரி, மாற்றுத்திறனாளியான இவர் எம்ஏ படித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காகவும், புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மருத்துவமனையில் நவீன கருவியை தொடங்கி வைத்து விட்டு காரில் புறப்பட்டார்.

அப்போது முதல்வரின் காரின் முன் திடீரென குறுக்கே வந்த மாரீஸ்வரி, கையில் மனுவுடன் வந்து தனக்கு அரசு வேலை வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதைப்பார்த்த முதல்வர் மாரீஸ்வரியிடம் அவரை பற்றி விசாரித்தார். அதன்பின் மாரீஸ்வரியிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் இரண்டு மணி நேரத்துக்குள் சுகாதாரத்துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வார்டு மேலாளர் பணியை அவருக்கு வழங்கி அதற்கான பணி நியமன ஆணையையும் மாரீஸ்வரிக்கு வழங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த மாரீஸ்வரி கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.