கமலைப் போய் என்கூட ஒப்பிடுறீங்க? என்னங்க பழக்கம் இது ச்சே!: திடுதிப்புன்னு கோபப்பட்ட திருமா

தீ பிடித்து எரிந்த தேர்தல் அனல் போதாதென்று பொன்பரப்பி கலவரம் வேறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவனை அநியாயத்துக்கு அப்செட்டாக்கி விட்டது. அதுபோதாதென்று தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் பிரசாரம் செய்ய ஸ்டாலின் தடைவிதித்துவிட்டார்! என்று கிளம்பியிருக்கும் தகவல் அவரை தாறுமாறாக கடுப்பேற்றி இருக்கிறது. 

இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சீமான், தினகரன் மற்றும் கமல்ஹாசன் மூவரும் திருமாவளவன் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கியை விட அதிகமான சதவீதம் வாக்குவங்கியை தனித்தனியாக பெறுவார்கள்! பல வருடங்களாக அரசியலில் இருக்கும் திருமாவை விட இப்போது வந்த இம்மூவரும் பெரும் செல்வாக்கை சட்டென பெற்றுள்ளனர்! என்று கிளம்பியுள்ளது புது பரபரப்பு. இதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழலில் வெடித்துவிட்டார் திருமா இப்படி...

“இது தேவையே இல்லாத ஒப்பீடு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான பின்னணி இருக்குது. கமல்ஹாசனோடு என்னை ஒப்பிடுவது பொருத்தமில்லாதது மட்டுமில்லை தேவையில்லாதது. இப்பல்லாம் சோஷியல் மீடியா பெரிய சக்தியாக இருக்குது. அதை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அரசியலின் உச்சம் சென்றுவிட முடியும். அதைத்தான் சிலர் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த உச்சத்தில் நீண்டநாட்கள் இருக்க முடியுமா? எங்களைப்போல் களத்தில் பெரும் சவால்களை தாண்டி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியுமா? என்பதே கேள்வி. 

தினகரனோடும், சீமானோடும் என்னை ஒப்பிடாதீங்க. எனக்குன்னு ஒரு தனித்துவம் இருக்குது, எனக்கான இடத்தை நான் அடைந்திருக்கிறேன்.” என்று கொதித்துக் கொந்தளித்துள்ளார். ஆனாலும் திருமா செல்லும் இடமெல்லாம் இந்த ஒப்பீட்டை முன் வைத்து, அவரை எமோஷனலாக தூண்டிவிடும் கூத்துகள் அரங்கேறிக் கொண்டே உள்ளன.