விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும் என்று அமமுக செய்தி தொடர்பாளர் சி. ஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார்.. எனினும் இந்த முடிவு தற்காலிகமானது எனவும் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் அவர் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியில் உள்ள செண்பகவள்ளியம்மன் கோயிலுக்கு சென்ற சசிகலாவை, அமமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி இன்று சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும். இது காலத்தின் கட்டாயம். சசிகலா மிகப்பெரிய பொறுப்பிற்கு வருவார்.

அவர் தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார். விரைவில் அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை. நிச்சயம் இது நடக்கும். பர்கூர் முதல் ஆர்.கே. நகர் தேர்தல் வரை எப்படி ஜெயலலிதா வெற்றி பெற்றாரோ அதே போல, டிடிவி தினரனும் வெற்றி பெறுவார். அதிமுகவை மீட்கவே அமமுக தொடங்கப்பட்டது. அது விரைவில் நடக்கும்”என்று தெரிவித்தார்.