மறைந்த தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்த போது ஒரு மூத்த அரசியல்வாதியை மட்டும் நம்பி விடாதீர்கள் என தன்னிடம் கூறியதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக- திமுக என மாறி மாறி பல ஆண்டுகளாக கூட்டணி வைத்து பாமக பலன் அடைந்து வருகிறது. அந்த வகையில் கருணாநிதி- ஜெயலலிதா இருவருடன் நட்பு பாராட்டியவர் ராமதாஸ். தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது பாமக. இந்நிலையில் தனது ட்விட்ட பக்கத்தில், ‘’திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்’’எனத் தெரிவித்துள்ளார்.  

அவர் மூத்த தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த பகிர்வுக்கு கருத்து தெரிவித்துள்ள சிலர், ‘’ஒரு தலைவர் மறைந்த பிறகு அவர் தன்னிடம் தனியாக கூறியதாக பூடகமாக கிசு கிசு கதை விடுவது எந்தக் கணக்கில் வரும்?? இதெல்லாம் தலைமை பண்புக்கு தகுமா?? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.