இது முதல் முறை என்றாலும் கூட அமித்ஷா மன்னித்து விட்டுவிடலாம்! ஆனால் தொடர்ந்து இரண்டாவது முறை நடந்திருக்கிறது. அதுவும், சாதாரண தொண்டனோ அல்லது கடை நிலை நிர்வாகியோ அல்ல. கட்சியின் மாநில நிர்வாகிகளே இப்படி நடந்து கொள்வதால், செம்ம டென்ஷனுக்கு உள்ளாகிவிட்டார் அமித்ஷா. விளைவு, அதிரடி ஆக்‌ஷன் பாய்ந்திருக்கிறது. 

என்ன விவகாராம்?....


புதுக்கோட்டையில் தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ண அரசு இல்ல திருமண விழா நேற்று ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் தமிழக பா.ஜ.க.வின் துணைத்தலைவரான அரசகுமார் கலந்து கொண்டார். அவ்விழாவில்  அவர் பேசுகையில் “உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் ஸ்டாலின். எங்க்ளின் நிரந்தர தலைவர். அவர் நினைத்திருந்தால் ஒரே இரவில் கூவத்தூருக்குள் புகுந்து, முதல்வர் பதவியை தட்டி பறித்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. ஆட்சி, அதிகாரத்தை ஜனநாயகத்தின் வாயிலாக பெற வேண்டும் என நினைக்கிறார். 

எம்.ஜி.ஆருக்கு பின் அழகான தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார். பொறுத்தார் பூமியாள்வார். அவர் முதல்வராகும் திருநாள் மலரும். ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்.” என்று பேசினார்.  

தி.மு.க.வினரையெல்லாம் விட அதிகமாக பா.ஜ.க.வின் தலைமை நிர்வாகி அரசகுமார் கூவிவிட, இந்த விவாகரம் அடுத்த சில நிமிடங்களில் அமித்ஷா வரை சென்றது. அவர், முறையான என்கொய்ரி நடத்திட கட்டளையிட்டார். அதன் படி இன்று தமிழக பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளரான நரேந்திரன் ஒரு உத்தரவை அறிக்கை வாயிலாக விட்டுள்ளார். அதில் “நம் தமிழக பாரதிய ஜனதாவின் மாநில துணை தலைவர்  அரசகுமாரின் அந்த பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை, அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அநேகமாக அரசகுமார் மீது குறைந்த பட்சம் சஸ்பெண்ட் நடவடிக்கை, அதிகபட்சம் டிஸ்மிஸ் நடவடிக்கை கூட பாயலாம்! என்கிறார்கள். 

அரசகுமாரின் இந்த செயலால் அமித்ஷா செம்ம டென்ஷனாகி விட்டாராம். காரணம், ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன் திருப்பூரில் மாஜி தி.மு.க. அமைச்சர் சாமிநாதனின் இல்ல  திருமணவிழாவில் பா.ஜ.க.வின் சீனியர் லீடரும், தேசிய நிர்வாகியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் இப்படித்தான் ஸ்டாலினை வானுயர புகழ்ந்து தள்ளினார். அந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. 

அதன் பின் விவாதங்களில் கூட பா.ஜ.க.வினரை பார்த்து ”எங்கள் தலைவரை உங்களின் தேசிய நிர்வாகியே ‘தளபதி’ என புகழ்ந்து தள்ளிவிட்டார் பொது மேடையில். நீங்களெல்லாம் எம்மாத்திரம்!” என்று கிண்டலடித்தனர். 

இந்த விவகாரம் அமித்ஷாவின் கவனத்துக்குப் போனது. தமிழகம் ஒன்றுதான் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய சவாலான மாநிலமாக இருக்கிறது. எப்படியாவது இங்கே ஆட்சியை அமைக்க வேண்டும் என அக்கட்சி துடிக்கிறது.  அதற்காக முழுமையான ஆளுமையை செலுத்தி வருகிறார் மோடி. இங்கே அவர்களின் முக்கிய எதிரி தி.மு.க.தான். ஆனால்  தமிழக பா.ஜ.க.வின் தலைவர்களோ பொது மேடைகளில் ஸ்டாலினை ஏகத்துக்கும் புகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இது, தாமரையை தமிழகத்தில் மலர வைக்க முயலும் மோடியின் தன்மானத்துக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது! என தேசிய தலைமை கருதுகிறது. 

அதனால்தான் அதிரடிகள் பாய துவங்கியுள்ளன. அநேகமாக அரசகுமார் பா.ஜ.க.விலிருந்து கழன்று கொண்டு தி.மு.க.வில் ஐக்கியமாகிவிடலாம். ஆனால் இனிமேல் யாரும் பா.ஜ.க.வில் இப்படி பேச துணியக்கூடாது என்பதே தேசிய தலைமையின் எண்ணம். 
அட என்னதான் பா ஆச்சு தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு?