தேசியமும் தெய்வீகமும் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு கண்கள். தேசியத்தை மதிக்காத திமுகவுக்கு உளவுத் துறை மூலம் சிறை நிச்சயம் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். 

சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக கண்மாய்களை தூர் வாரும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காகத் தான் முதல்வர் லண்டன் செல்கிறார். மு.க.ஸ்டாலினுக்கு எங்களை குறை கூறுவது தான் வேலை.

மத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்காகத் தான் வெற்றிகரமான பயணங்களை மேற்கொள்ள இருக்கின்றார். பா.ஜனதாவோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அ.தி.மு.க.தான். தேசியத்தின் பார்வையில் பா.ஜனதா எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அ.தி.மு.க.வை கவர்ந்துள்ளது.

 தி.மு.க. பிரிவினையை தூண்டக் கூடிய கட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியத்தையும், தெய்வீகத்தையும் மதிக்க கூடியவர். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு சிறு எறும்புக்கூட இடையூறு இருக்காது. தி.மு.க.பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறது. மத்திய உள்துறை எடுக்கும் பட்டியலில் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர் என்கிற பட்டியலில் தி.மு.க. மாட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும். மாட்டினால் மாட்டியது தான்.

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது நல்ல திட்டமாக இருந்தால் எந்த அரசியல் தலைவர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம்.

கமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் போல. திடீரென வருவார்கள் போய் விடுவார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல் மீண்டும் அரசியலுக்கு வருவார்’’ என அவர் தெரிவித்தார்.