ராமாயணம் காலத்திலேயே பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும் மகாபாரதத்தில் அர்ஜுனன் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் மேற்கு வங்க ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .   பாஜகவை சேர்ந்த  தலைவர்களின் அதிரடி பேச்சுகள் சில நேரங்களல் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி விடுகின்றன.   அதற்கு காரணம் அவர்களின் பேச்சுகள் அந்த அளவிற்கு நம்ப முடியாதவைகளாகவும்  அறிவியலுக்கு முரணானதாகவும்  இருப்பதே காரணமாகும் .  மாட்டு கோமியத்தை மருந்தாகப் பயன்படுத்தலாம் என நிதின்கட்கரி கூறியதும்,   மகாபாரத காலத்தில் இன்டர்நெட் இருந்தது  என்று  திரிபுரா பாஜக முதல்வர் முன்பு கூறியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இந்நிலையில் மேற்கு வங்கமாநிலம் கொல்கத்தாவில்  அறிவியல் கண்காட்சியை திறந்து வைக்குப்  நிகழ்ச்சியில் மேற்குவங்க ஆளுநர்  ஜெகதீஷ் தங்கர்  பேச்சு அறிவியல் ஆராய்ச்சியாளர்களை தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது .  கொல்கத்தாவில் அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், கடந்த  1910 அல்லது 1911-ல் தான் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன ,  ஆனால் ராமாயண காலத்திலேயே பறக்கும் தேர்கள் இருந்தன .  அதேபோல் அர்ஜுனன் அம்பில் அணுஆயுதம் இருந்தது எனவே  உலகம் இந்தியாவை புறக்கணிக்க முடியாது என அவர் பேசினார்.  ஆளுநரின் இந்த பேச்சு  அறிவியல் அறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் மேற்குவங்க விஞ்ஞானி  பிகாஷ்  சின்ஹா மேற்குவங்க ஆளுநரின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார் . தொடர்ந்து கண்டித்துள்ள அவர்,   ஆளுநரின் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று நினைக்கிறேன்,  தங்கள் பேச்சுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் ஆதாரம்  உள்ளது என்று  இதுபோன்ற நபர்கள் குறிப்பிடும்போது ஒரு விஞ்ஞானியாக தனக்கு கோபம் வருகிறது .  இதுபோன்று பொறுப்புமிக்க பதவியில்  உள்ளவர்கள் இப்படி அபத்தமாக பேசக்கூடாது. பேசுவதற்கு முன்னர்  என்ன பேசுகிறோம் என்பதை ஒரு கணம் உணர்ந்து பேச வேண்டும் .   யாராவது இவருக்கு ஆலோசனை வழங்குங்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.