காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வருத்தத்தைத் தருகிறது. 88 வயதான அவர், விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும். இந்திய மக்களின் சார்பாக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் நிதி அமைச்சராகவும், 10 ஆண்டுகள் பிரதமராகவும் பொறுப்பேற்று, புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி, நாட்டை உலக நாடுகளுக்கு இணையாக வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் டாக்டர் மன்மோகன் சிங்.


உலகத் தலைவர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய எல்லோருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இக்கோரிக்கையில் சிலவற்றை மத்திய அரசு உடனே நிறைவேற்றியுள்ளது. அவர் கூறிய யோசனைகளை நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிக்க வேண்டும். ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம், தரம் தாழ்ந்து மலிவான அரசியல் உள்நோக்கத்தோடு எழுதியிருக்கிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..


மன்மோகன் சிங் யோசனையை நாட்டு மக்கள் வரவேற்கிறார்கள். அதற்கு சமூக ஊடகங்களில் பதிவானவையே சாட்சி. நேற்று ஒரே நாளில் 2.57 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,757 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் ஒன்றரை கோடி மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆனால், அதேநேரத்தில் ஒருநாளைக்கு 35 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், அது 12 லட்சமாக நேற்று குறைந்துள்ளது. இது ஏற்கனவே போடப்பட்ட எண்ணிக்கையைவிட 18 லட்சம் குறைவு. அதற்குக் காரணம்  தெரியவில்லை.
இந்தியாவில் இதுவரை நூறு பேரில் 9 பேருக்குதான் ஏப்ரல் 18 நிலவரப்படி தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 135 கோடி மக்கள் உள்ள நாட்டில் 10 சதவீதம் பேருக்குக்கூட தடுப்பூசி போடாதது அதிர்ச்சியைத் தருகிறது. இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்கள் மக்கள் தொகையில் 1.5 சதவீதம் பேர். தற்போது 18 வயது உள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசி உற்பத்தியை உயர்த்தியிருக்கிறார்களா என்றால், அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எனவே, இந்த இலக்குகளை அடைய போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
பிரதமர் மோடி 135 கோடி மக்களுக்கும் பொதுவானவராக செயல்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்புணர்ச்சியோ மேற்கு வங்கப் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். ஆனால், பாஜக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்துத் தலைவர்களும் பல நாட்களாக மேற்கு வங்காளத்தில் முகாமிட்டு எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றி பெறாது. கொரோனா தொற்று பரவக் கூடாது என்பதைவிட, தேர்தல் பிரசாரத்தின் மூலம் ஆதாயம் தேடுகிற நோக்கம்தான் இவர்களிடம் மிஞ்சியுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.