முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்ததால், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழந்தனர். தங்களது பதவியை இழந்த பிறகு, நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்றும், தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம் என்றும் டிடிவி ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

அதே சமயம் அதிமுகவுக்கு துரோகமிழைத்தவர்கள் யார் யார் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில்தான், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விட்டிருந்தனர். ஆனால், அவர்களது அழைப்பை டிடிவி ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. மீண்டும் நாங்கள் புதைக்குழிக்குள் செல்ல மாட்டோம் என்றே அவர்கள் கூறி வந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடியின் அழைப்பை மறுத்த டிடிவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுகவைச் சேர்ந்த பலர் அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் கழக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைத்தியலிங்கம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கூட்டம்  நடைப்பெற்றது. இந்த கூட்டத்தின்போது, 20 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்தனர். காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் எம்.பி. வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு, எம்.பி. வைத்தியலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைய அழைத்து கொண்டிருக்கிறோம் என்றார். விலகிச் சென்ற அதிமுக தொண்டர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அழைப்பு டிடிவி தினகரனைத் தவிர மற்ற அனைவருக்கும் பொருந்தும் என்றும் எம்.பி. வைத்தியலிங்கம் கூறினார்.