கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள சிறு வியாபாரிகளின் கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தனர். கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் கோயம்பேடு வணிக வளாக வியாபாரிகள் முன்னணி சங்கத்தினர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன். 

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு மார்க்கெட்டை தமிழக அரசு மூடி ஐந்து மாதங்கள் ஆகிறது, இதனால் சுமார் 10 ஆயிரம் சிறு வியாபாரிகளும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 28ம் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த மொத்த வியாபார கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 

இது அரசின் ஒருதலைப்பட்சமான அறிவிப்பு எனவே சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு கடைகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இது சார்ந்த அறிவிப்பை வெளியிட அரசு தவறும் பட்சத்தில் அனைத்து சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.